/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வி.ஏ.ஓ.,க்கள் காத்திருப்பு போராட்டம்; முடங்கிய வருவாய்த் துறை பணிகள்
/
வி.ஏ.ஓ.,க்கள் காத்திருப்பு போராட்டம்; முடங்கிய வருவாய்த் துறை பணிகள்
வி.ஏ.ஓ.,க்கள் காத்திருப்பு போராட்டம்; முடங்கிய வருவாய்த் துறை பணிகள்
வி.ஏ.ஓ.,க்கள் காத்திருப்பு போராட்டம்; முடங்கிய வருவாய்த் துறை பணிகள்
ADDED : மார் 07, 2025 03:45 AM

திருப்பூர்; கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தினர் நடத்திய தொடர் காத்திருப்பு போராட்டத்தால், திருப்பூரில் கடந்த இரண்டு நாட்களாக வருவாய்த்துறை சார்ந்த சான்று வழங்கும் பணிகள் முடங்கின.
திருப்பூர் வருவாய் மாவட்டத்தில் ஒன்பது தாலுகாக்கள் உள்ளன. ஐந்து தாலுகாவை உள்ளடக்கிய திருப்பூர் வருவாய் கோட்டத்தில், 12 குரூப் கிராமங்கள் உள்ளன. திருப்பூர் தெற்கு தாலுகாவில் மட்டும், 4 குரூப் கிராமங்கள் உள்ளன. தெற்கு தாலுகாவுக்கு உட்பட்ட தொங்குட்டிபாளையம் பிரதான கிராமத்தில், கரட்டுப்பாளையம் குரூப் கிராமமாக இயங்கி வருகிறது.
கரட்டுப்பாளையத்துக்கு வி.ஏ.ஓ., வாக விஸ்வநாதன் சமீபத்தில் பணியிடமாறுதல் பெற்றுவந்தார். அவருக்கு, தொங்குட்டிபாளையம் வி.ஏ.ஓ., விஜயராகவன், ஆன்லைன் சான்று வழங்குவதற்கான யூசர் நேம், பாஸ்வேர்டு வழங்க மறுத்துள்ளார். கரட்டுப்பாளையம் பணிகளையும் தொங்குட்டிபாளையம் வி.ஏ.ஓ.,வே கவனித்து வருவதாகவும்; வி.ஏ.ஓ., விஸ்வநாதனுக்கு பிரத்யேக யூசர் நேம், பாஸ்வேர்டு வழங்க கோரியும், கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தினர், போராட்டத்தில் இறங்கினர்.
அச்சங்கத்தினர் உறுப்பினராக உள்ளவர்களின் நான்கு பெண் வி.ஏ.ஓ.,க்கள் உள்பட 30க்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ.,க்கள், திருப்பூர் - குமரன் ரோட்டிலுள்ள ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில் நேற்றுமுன்தினம் காலை முதல் காத்திருப்பு போராட்டத்தை துவக்கினர். அவர்களிடம் ஆர்.டி.ஓ., மோகனசுந்தரம் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படாததால், இரவு பகலாக நேற்றும் 60க்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ.,க்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால், மாவட்டம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் இரண்டு நாட்களாக, பட்டா மாறுதல், வருவாய், பிறப்பு - இறப்பு சான்று வழங்கல் உள்ளிட்ட பணிகள் முடங்கின.
இதனால், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று டி.ஆர்.ஓ., கார்த்திகேயன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆர்.டி.ஓ., மோகன சுந்தரம் உள்பட வருவாய்த்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க பிரதிநிதிகள் மற்றும் தொங்குட்டிபாளையம் வி.ஏ.ஓ., விஜயராகவன் சார்ந்துள்ள தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினரிடம் தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மாலை, 5:30 மணி வரை பேச்சுவார்த்தை முடிவடையாதநிலையில், வி.ஏ.ஓ.,க்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர்.