/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறுங்காடாக மாறும் வட்டமலைக்கரை ஓடை அணை
/
குறுங்காடாக மாறும் வட்டமலைக்கரை ஓடை அணை
ADDED : செப் 07, 2024 01:24 AM

திருப்பூர்:'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில், வட்டமலைக்கரை ஓடை அணையில், 1,400 மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டுள்ளது.
'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழுவினர், இயற்கையே தெய்வம் என்று போற்றி, மண்ணில், மரக்கன்றை நட்டு வளர்க்கின்றனர். வளர்ந்த மரங்களையும் தெய்வமென கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், வெள்ளகோவில் வட்டமலைக்கரை ஓடை அணையில், நேற்று 1,400 மரக்கன்றுகள் நடப்பட்டது. வேம்பு, நாவல், இலுப்பை, கொடுக்காப்புளி, புங்கன் ஆகிய மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது. 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழுவினரும், நிழல்கள் அமைப்பினரும் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
ஆள் நடமாட்டம் குறைவான பகுதி என்பதால், பறவைகள் அதிகம் வசிக்கின்றன; இதன் காரணமாக, பறவைகளுக்கு உணவாக பயன்படும் என்பதால், கொடுக்காப்புளி, நாவல் மரங்கள் அதிக அளவு நடப்பட்டுள்ளன. கால்நடை மேய்ச்சலுக்கு வசதியாக, நிழல்தரும் மரங்களும் நடப்பட்டுள்ளன.
இதுகுறித்து நிழல்கள் மற்றும் வனத்துக்குள் திருப்பூர் திட்டக்குழுவினர் கூறுகையில், 'வனத்துக்குள் திருப்பூர் - 10' திட்டத்தில், நடப்பு ஆண்டில், மூன்று லட்சம் மரக்கன்று நட்டு வளர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தற்போது, 50 சதவீத மரங்கள் என்ற அளவை நெருங்கி விட்டோம். இதுவரை, 1.40 லட்சம் மரக்கன்றுகள் நட்டு முடிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், மரக்கன்றுகள் நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்,' என்றனர்.
---------------------------
வெள்ளகோவில் வட்டமலைக்கரை ஓடை அணையில், நேற்று 1,400 மரக்கன்றுகள் நடும் துவக்க விழா நடைபெற்றது.