/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காய்கறி கழிவுகள் தேக்கம்; 'நாறும்' சந்தை வளாகம்; பொதுமக்கள், மாணவர்கள் பாதிப்பு
/
காய்கறி கழிவுகள் தேக்கம்; 'நாறும்' சந்தை வளாகம்; பொதுமக்கள், மாணவர்கள் பாதிப்பு
காய்கறி கழிவுகள் தேக்கம்; 'நாறும்' சந்தை வளாகம்; பொதுமக்கள், மாணவர்கள் பாதிப்பு
காய்கறி கழிவுகள் தேக்கம்; 'நாறும்' சந்தை வளாகம்; பொதுமக்கள், மாணவர்கள் பாதிப்பு
ADDED : பிப் 21, 2025 10:57 PM

உடுமலை; உடுமலை நகராட்சி சந்தையில், காய்கறி கழிவுகள் முறையாக அகற்றப்படாமல், துர்நாற்றம், சுகாதாரக்கேடு ஏற்படுத்தி வருகிறது.
உடுமலை நகராட்சி சந்தை, 6.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த விவசாயிகள் விளைவித்த காய்கறிகளை, இங்கு அமைந்துள்ள, 37 கமிஷன் கடைகள் வாயிலாக, ஏல முறையில் விற்பனை செய்து வருகின்றனர்.
தினமும், 1,200 டன் காய்கறிகள் வரை வரத்து உள்ள நிலையில், விவசாயிகள் மற்றும் பல்வேறு மாவட்ட வியாபாரிகள், கேரளா மாநில வியாபாரிகள் காய்கறிகள் கொள்முதல் செய்ய வருகின்றனர்.
அதே போல், இதே வளாகத்தில், 350க்கும் மேற்பட்ட கடைகளுடன் தினசரி காய்கறி சந்தையும் செயல்படுகிறது. திங்கட்கிழமை சந்தை கூடும் நாட்களில், 700க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்படுகின்றன.
காய்கறிகள் வாங்க, தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். உடுமலை நகராட்சி சந்தையில், தினமும், 30 டன் வரை காய்கறி கழிவுகள் சேகரமாகிறது.
இவற்றை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், அரைத்து உரமாக மாற்றும் திட்டம் உள்ளிட்ட முறையான கழிவுகள் அகற்றும் திட்டம் செயல்படுத்தப்படாமல், சந்தை வளாகத்தின் ஒரு பகுதியில் குவித்து வைக்கப்படுகிறது.
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் அதிக கழிவு வெளியேற்றும் நிறுவனங்கள், அவர்களே அகற்ற வேண்டும், என விதி உள்ள நிலையில், சந்தையில் துர்நாற்றம், சுகாதார கேடு ஏற்படுத்தும் வகையில் கழிவுகள் கொட்டி வைக்கப்படுகிறது.
இதனால், துர்நாற்றம், சுகாதாரக்கேடு காரணமாக, சந்தைக்கு வரும் பொதுமக்கள் மட்டுமின்றி, ராஜேந்திரா ரோட்டில் அமைந்துள்ள பள்ளி மாணவர்கள், வணிக நிறுவனத்தினர், தனியார் மருத்துவமனைகளுக்கு வரும் பொதுமக்கள், நேதாஜி விளையாட்டு மைதானத்திற்கு வரும் இளைஞர்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும், துர்நாற்றத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும், சந்தை வணிக வளாகத்தில், ஆடு, மாடு, கோழி ஆகிய கடைகளில் திறந்த வெளியில் அறுக்கப்பட்டு, இறைச்சிக்கழிவுகளும் சந்தை வளாகத்திற்குள் கொட்டப்படுகிறது.
மேலும், மீன் கடை கழிவுகளும் இங்கு கொட்டப்படுவதால், சந்தை வளாகம் சுகாதார கேடு நிறைந்த மையமாக மாறியுள்ளது.
எனவே, காய்கறி கழிவுகளை முறையாக அகற்றவும், இறைச்சி கடைகளுக்கு தனி வணிக வளாகம் அமைக்கவும் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.