ADDED : ஆக 14, 2024 11:26 PM
பஞ்சாயத்து ராஜ் சட்டம் - கிராம பஞ்சாயத்துகளில் உள்ள மக்களுக்கு தனி சிறப்பு பெற்ற அதிகாரத்தை இச்சட்டம் வழங்கியிருக்கிறது. பல்வேறு சட்டங்களை இயற்றும் அதிகாரமிக்க சட்டசபை, லோக்சபாவில், அந்த சட்டங்கள், தொடர்புடைய விஷயங்களை சட்டமன்ற, லோக்சபா உறுப்பினர்கள் தான் விவாதிக்க முடியுமேதவிர, சாதாரண குடிமக்களால், அதில் பங்கெடுக்க முடியாது.
ஆனால், தேர்தல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற பிரதிநிதிகளால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கேள்வி கேட்கும் அதிகாரத்தை மக்களுக்கு வழங்கியிருக்கிறது, கிராம சபைகள். நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மட்டுமல்ல, செய்த வேலைகள், செய்யப்படவுள்ள வேலைகளையும் பரிசீலனைக்கு உட்படுத்தும் அதிகாரத்தை வழங்கியிருக்கிறது.
ஊராட்சி மன்றத்தால் செய்யப்படும் ஒவ்வொரு ரூபாய்க்கும் கிராம சபையின் ஒப்புதல் தேவை. மக்களுக்காக என்னென்ன புதிய திட்டம் தேவை, என்னென்ன வேலைகள் வேண்டும் என்றெல்லாம் கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியும். செய்து தராத பட்சத்தில், அதற்கான விளக்கத்தையும் கேட்டுப் பெற முடியும்.
ஊராட்சிகளின் தீர்மானம்
அரசு நிராகரிக்கக்கூடாது
இத்தகைய அதிகாரங்களைக் கொண்டிருக்கும் கிராம சபை, ஊராட்சி மன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தை நிராகரிக்கும் அதிகாரத்தையும் பெற்றிருக்கிறது என்பது தான், உரிமையின் உச்சம். இத்தகைய வலிமையான கிராம சபைகள், பல இடங்களில் வலுவிழந்திருக்கின்றன என்பது, மறுக்க முடியாது உண்மை.
பல இடங்களில் நடத்தப்படும் கிராம சபை கூட்டங்களில் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் பங்கெடுப்பதில்லை; நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் நடைமுறைக்கு வருவதில்லை. அடுத்து வரும் கூட்டங்களிலும் அதே பிரச்னைகள் திரும்ப, திரும்ப வலியுறுத்தப்படுகின்றன.உதாரணமாக, ஊராட்சிகளில் சுகாதாரம் என்பது, கேள்விக்குறியாகி இருக்கிறது; போதியளவு துாய்மைப்பணியாளர்கள் இல்லை; குப்பைகளைக் கொட்ட இடம் கூட இல்லை.
'இதுபோன்ற பிரச்னைகளுக்கு கிராம சபையில் தீர்வு இல்லை' என்கின்றனர் மக்கள். எனவே, கிராம சபையில் நிறைவேற்றப்படும் ஒவ்வொரு தீர்மானமும் உயிர்பெற வேண்டும் என்பதே, பொதுவான எதிர்பார்ப்பு.