/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நினைத்த காரியத்தை நிறைவேற்றி கொடுக்கும் அறுபடை நவக்கிரஹ ஸ்ரீரத்ன விநாயகர்
/
நினைத்த காரியத்தை நிறைவேற்றி கொடுக்கும் அறுபடை நவக்கிரஹ ஸ்ரீரத்ன விநாயகர்
நினைத்த காரியத்தை நிறைவேற்றி கொடுக்கும் அறுபடை நவக்கிரஹ ஸ்ரீரத்ன விநாயகர்
நினைத்த காரியத்தை நிறைவேற்றி கொடுக்கும் அறுபடை நவக்கிரஹ ஸ்ரீரத்ன விநாயகர்
UPDATED : செப் 06, 2024 03:33 AM
ADDED : செப் 06, 2024 03:19 AM

முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் வகையில், அறுபடை வீடு இருப்பதை பக்தர்கள் அனைவரும் அறிவார்கள். இதேபோல், அறுபடை விநாயகர் கோவில்கள் இருப்பது, எத்தனை பக்தர்களுக்கு தெரியும்? தமிழகம் முழுவதும் ஆன்மிக பயணமாக செல்ல முடியாதவர்கள், தொழில் வளம் மிகுந்த திருப்பூரில், அறுபடை விநாயகர்களை, மங்கலம் ரோடு, எஸ்.ஆர்., நகரில், ஒரே இடத்தில் தரிசிக்கலாம்!
எஸ்.ஆர்., நகரில், அறுபடை நவக்கிரஹ ரத்தின விநாயகர் கோவில், 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. விநாயகரின் சிரசில் குரு, நெற்றியில் சூரியன், வலது கரங்களில் சனி மற்றும் புதன், இடது கரங்களில்ராகு மற்றும் சுக்கிரன், வயது காலில் செவ்வாய், இடது காலில்கேது, வயிற்றில் சந்திரன் என, நவகிரகங்களும், ரத்தின விநாயகருக்குள் அடக்கம் என்பார்கள்.
சந்திர பகவானுக்கு, விநாயகர் தரிசனம் கொடுத்த நாளே, தேய்பிறையின் 4வது நாளான சதுர்த்தி; சங்கடங்களை போக்கும் சதுர்த்தி என்பதால், சங்கடஹர சதுர்த்தி என்று, நிலவு வந்ததும் விநாயகரை வழிபடுகிறோம். இக்கோவிலில், சங்கடஹர சதுர்த்தி நாளில், சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் விமரிசையாக நடந்து வருகின்றன.
ரத்தினவிநாயகர் கோவில் கருவறை, யானைபின் பின்புறம் போன்ற அமைப்புடன், 'கஜ பிரஷ்டம்'என்ற அடிப்படையில், விமானத்துடன் கட்டப்பட்டுள்ளது. நினைத்த காரியத்தை நிறைவேற்றி கொடுக்கும் மதுரை முக்குருணி விநாயகர், 5.50 அடி உயரத்தில், மூலவராக ஆற்றல் பொருந்தியவராக வீற்றிருக்கிறார்.
கோவில் கருவறையை சுற்றிலும், கல்வியும் ஞானமும் அருளும் ஆழத்து விநாயகர், மரண பயம் போக்கும் திருக்கடையூர் கள்ளவாரண விநாயகர்; அல்லல் தீர்க்கும் திருவண்ணாமலை செந்துார விநாயகர், ஞானம் அருளும் திருநாரையூர் பொல்லாபிள்ளையார், முக்திக்கு வழிகாட்டும் காசி துண்டி விநாயகர்கள் அருள்பாலிக்கின்றனர்.
இவ்வாறு பல இடங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள், எஸ்.ஆர்., நகரில், ஒரே கோவிலில் அமர்ந்து பக்தர்களுக்கு நற்கதி வழங்கி வருகின்றனர். பக்தர்கள் வசதிக்காக, கோவிலின் வடகிழக்கு பாகத்தில், நீருற்று விநாயகர் மற்றும் நாகர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அதாவது, சப்த ஸ்வரங்களை போல், ஏழு விநாயகர் இங்கு எழுந்தருளுகின்றனர்.
கோவில் சிறப்பு செந்தில்குமார் குருக்கள் கூறுகையில், ''சந்திரனுக்கு தரிசனம் கொடுத்த நாளையே, சங்கடஹர சதுர்த்தி என்று வழிபடுகிறோம். அங்காரகன், விநாயகரை பூஜித்து வழிபட்டதால் தான், நவகிரகங்களில் செவ்வாயாக இருக்கும் அமைப்பை பெற முடிந்தது. அறுபடை நவகிரஹ ரத்தின விநாயகர் கோவிலில், மூலவராக வீற்றிருக்கும் முக்குருணி விநாயகர், நவகிரஹங்களையும், தன்னுள்ளே அடக்கியிருக்கிறார். இங்குள்ள விநாயகரை நெஞ்சுருக வழிபட்டால், எத்தகைய நவக்கிரஹ தோஷமும் விலகும்; தடைகள் அகலும்,'' என்றார்.
---
எங்கே உள்ளது...
திருப்பூர், மங்கலம் ரோட்டில், குமரன் மகளிர் கல்லுாரி அருகிலேயே, கோவில் அமைந்துள்ளது.
பூஜை நேரம்: காலை, 6:00 முதல், மதியம், 12:00 மணி வரை. மாலை, 5:00 முதல் இரவு, 8:00 மணி வரை.
தொடர்புக்கு: 95004 51110