/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும்! பொதுமக்கள், விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும்! பொதுமக்கள், விவசாயிகள் எதிர்பார்ப்பு
நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும்! பொதுமக்கள், விவசாயிகள் எதிர்பார்ப்பு
நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும்! பொதுமக்கள், விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 04, 2024 05:17 AM
திருப்பூர்: 'நீர்நிலைகள் மேம்படுத்தும் திட்டத்தில், திருப்பூர் மாவட்டத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்' என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கையின் மீது நடந்த விவாதத்தில், நகர்ப்புற உள்ளாட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் நேரு பேசுகையில்,'இந்தாண்டு, 20 நீர் நிலைகள், 8.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துார்வாரி ஆழப்படுத்தி, கரைகள் பலப்படுத்தப்படும்; அவற்றின் மீது நடைபாதை மற்றும் பசுமை வெளிகள் அமைத்து அழகு படுத்தப்படும்' என்றார்.
இத்திட்டத்தில், 'திருப்பூர் மாவட்டத்துக்கும் முக்கியத்துவம் வழங்க வேண்டும்' என, மக்கள் எதிர்பார்க்கின்றனர். மழை மறைவு பிரதேசமாக உள்ள திருப்பூரில், ஆண்டு சராசரி மழையளவு இயல்பாகவே குறைவு; இருப்பினும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்யும் மழைநீரே, பிரதான நீராதாரமாக இருந்து வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் அதிகம்; குறிப்பாக, அவிநாசி ஒன்றியத்தில், நுாற்றுக்கணக்கில் குளம், குட்டைகள் உள்ளன. மழையின் போது இவற்றில் தேங்கும் மழைநீர் தான், நீராதாரமாகவும், நிலத்தடி நீர்மட்டம் உயரவும் காரணமாக இருக்கிறது.
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது: 'நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும்' என, ஏற்கனவே ஐகோர்ட் வழிகாட்டியுள்ளது. 'நீர்நிலைகள் மேம்படுத்தப்படும்' என, மாநில அரசும் அறிவித்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் அடையாளம் காணப்பட்டு, துார்வாரி சுத்தம் செய்யப்பட வேண்டும்.
குறிப்பாக, அவிநாசி தாலுகாவில் ஏராளமான நீர்நிலைகள் உள்ளன. அவற்றை துார்வாரி, சுத்தம் செய்ய வேண்டும். தாமரைக்குளம் பகுதியில் வசிக்கும் மக்கள் பட்டா கேட்கின்றனர்; நீர்நிலை புறம்போக்கை ஆக்கிரமித்ததே தவறு. அங்கு பட்டா கேட்பதும், அதிகாரிகள் அதற்கு அனுமதி வழங்குவதும், கோர்ட் அவமதிப்பு. எனவே, நீர்நிலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இதனை விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் முன்வைத்தும், அதிகாரிகள் விளக்கம் அளிக்காதது, ஏமாற்றமே.
இவ்வாறு, அவர் கூறினார்.