/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாக்கு எண்ணிக்கை கண்காணிக்க மேஜை தோறும் 'வெப் கேமரா'
/
வாக்கு எண்ணிக்கை கண்காணிக்க மேஜை தோறும் 'வெப் கேமரா'
வாக்கு எண்ணிக்கை கண்காணிக்க மேஜை தோறும் 'வெப் கேமரா'
வாக்கு எண்ணிக்கை கண்காணிக்க மேஜை தோறும் 'வெப் கேமரா'
ADDED : ஏப் 28, 2024 12:51 AM

திருப்பூர்;வாக்கு எண்ணிக்கை பணியை, இணையதளம் வாயிலாக கண்காணிக்க வசதியாக, ஒவ்வொரு டேபிளுக்கும், 'வெப் கேமரா' பொருத்த, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில், ஓட்டுப்பதிவு முடிந்து, கடந்த ஒன்பது நாட்களாக, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 'ஸ்ட்ராங் ரூம்'களில் இருக்கின்றன. திருப்பூர் தொகுதியில் பயன்படுத்திய ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், எல்.ஆர்.ஜி., கல்லுாரி வளாகத்தில் உள்ள, எட்டு 'ஸ்ட்ராங் ரூம்'களில் வைக்கப்பட்டுள்ளன.
இடப்பற்றாக்குறை காரணமாக, கோபி, அந்தியூர் தொகுதிகளுக்கு மட்டும், தலா, இரண்டு 'ஸ்ட்ராங் ரூம்'கள் அமைக்கப்பட்டுள்ளன. துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை, போலீசார் என, நான்கடுக்கு போலீஸ் பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது. போலீசார் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கண்காணிப்பது போல், வேட்பாளர் பிரதிநிதிகள் கண்காணிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
கல்லுாரி வளாக நுழைவாயிலில் நுழைந்ததும், இடதுபுறம், ஷெட் அமைத்து, ஏர் கூலர் வசதியுடன் காத்திருப்பு அறை உருவாக்கப்பட்டுள்ளது. அதில், வேட்பாளர் பிரதிநிதிகள், இரண்டு அல்லது, மூன்று 'ஷிப்ட்' முறையில், கண்காணித்து வருகின்றனர்.
'ஸ்ட்ராங் ரூம்'கள் உட்பட, ஓட்டு எண்ணிக்கை மையத்தில், 260 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பதிவுகளை நேரடியாக காணும் வகையில், வேட்பாளர் பிரதிநிதிகள் அறையில், 12 'டிவி' பொருத்தப்பட்டு, 'சிசிடிவி' கண்காணிப்பை, நேரடியாக பார்த்து, பாதுகாப்பை உறுதி செய்து வருகின்றனர்.
ஒவ்வொரு சட்டசபை தொகுதி வாரியாக, ஓட்டு எண்ணும் அறை அமைக்கும் பணியும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தலா, 14 டேபிள் அமைத்து, ஓட்டு எண்ணிக்கை பணியை தொடர வசதி செய்யப்பட்டு வருகிறது.
குறிப்பாக, ஒவ்வொரு டேபிளில் நடக்கும் ஓட்டு எண்ணிக்கை பணி முழுவதையும், 'வெப் கேமரா' மூலமாக கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக, ஒயர் இல்லாத 'வெப் கேமரா'கள் பொருத்தப்பட உள்ளன.
இவற்றை, தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், தேர்தல் பொது பார்வையாளர் மட்டுமல்லாது, தேர்தல் கமிஷன் அதிகாரிகள் சென்னையில் இருந்து இணையதளம் வாயிலாக கண்காணிக்கவும் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
அதற்காக, ஓட்டு எண்ணிக்கை மையத்தில், ஒவ்வொரு டேபிள் பகுதியை கண்காணிக்கும் வகையில், இரும்பு கம்பி தடுப்பில், 'வெப் கேமரா' பொருத்தப்பட உள்ளது. இதேபோல், 'விவி பேட்' கருவியில் இருந்து சேகரிக்கப்பட்ட ஓட்டுச்சீட்டு எண்ணும் பணியை கண்காணிக்கவும், 'வெப் கேமரா' பொருத்தப்படுமென, தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.

