ADDED : மே 31, 2024 11:48 PM
திருப்பூர்:ஓட்டுச்சீட்டில் எழுதியிருந்தாலோ, தேவையற்ற குறியீடுகள் இருந்தாலோ, செல்லாத ஓட்டாக நிராகரிக்கப்படவேண்டும் என, தபால் ஓட்டு எண்ணும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்திலுள்ள 39 தொகுதிகளில், லோக்சபா தேர்தல் ஓட்டுப் பதிவு, கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்றது. வாக்காளர்கள், தங்கள் ஓட்டுச்சாவடிகளுக்கு சென்று, ஓட்டுப்பதிவு செய்தனர். தேர்தல் பணிகளில் ஈடுபட்ட அரசு அலுவலர்கள், போலீசார், தாங்கள் பணிபுரியும் இடங்களிலேயே தபால் ஓட்டு பதிவு செய்தனர்.
திருப்பூர் லோக்சபா தொகுதியில், 7,179 தபால் ஓட்டு பதிவாகியுள்ளன; இதுவரை 89 சர்வீஸ் வாக்காளரின் ஓட்டு வந்துசேர்ந்துள்ளன. வரும் ஜூன் 4ம் தேதி, எல்.ஆர்.ஜி., கல்லுாரி மையத்தில், திருப்பூர் தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.
காலை, 8:00 மணிக்கு முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. ஏழு டேபிள்களில் தபால் ஓட்டுகளும்; ஒரு டேபிளில் சர்வீஸ் வாக்காளரின் ஓட்டுகளும் எண்ணப்படும்.
தபால் ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபட உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், ஓட்டு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள், உதவி ஓட்டு எண்ணிக்கை மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சி, கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. டி.ஆர்.ஓ., ஜெய்பீம் தலைமை வகித்தார்.
ஓட்டு எண்ணிக்கை நாளான ஜூன் 4ம் தேதி, முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்படும். நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள் மற்றும் ஆன்லைன் தபால் ஓட்டுகள் மட்டுமே எண்ணிக்கைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
ஓட்டு எண்ணிக்கை துவங்கும்முன், தபால் ஓட்டுக்களின் எண்ணிக்கை விவரங்களை முகவர்களிடம் தெரிவிக்கவேண்டும். ஓட்டு பதிவு செய்யாத சீட்டு; ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளருக்கு ஓட்டளித்த சீட்டு; மிகவும் சேதமான ஓட்டுச்சீட்டுகள்; உறுதி மொழி கடிதம் இல்லாத சீட்டுகள்; குழப்பமான ஓட்டுப்பதிவு; 'டிக்' செய்வதற்கு பதிலாக வேறு ஏதேனும் குறியீடுகள் செய்திருந்தாலோ, எழுதியிருந்தாலோ, அத்தகைய தபால் ஓட்டு செல்லாது. வாக்காளர் பட்டியல் விவரம், அதிகாரியின் சான்றொப்பம், கையெழுத்து உள்பட அனைத்து விவரங்களும் சரியாக உள்ள தபால் ஓட்டுகள் மட்டுமே எண்ணிக்கைக்கு ஏற்கப்படும்.
ஓட்டு எண்ணிக்கை நடவடிக்கையை, மைக்ரோ அப்சர்வர்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்; ஓட்டு எண்ணிக்கை முடிந்த உடன், அவ்விவரங்களை, தேர்தல் பார்வையாளருக்கு சமர்ப்பிக்கவேண்டும் என, பயிற்சி கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
