ADDED : ஆக 06, 2024 06:46 AM

திருப்பூர்: ''அடித்தட்டு மக்கள் நலனுக்காக தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்களை பயனாளிகளிடம் சரிவரக் கொண்டு சேர்க்க வேண்டியது ஒவ்வொரு அரசு அலுவலர்களின் கடமை'' என்று திருப்பூர் மாவட்டத்துக்கான கண்காணிப்பு அலுவலர் வள்ளலார் அறிவுறுத்தினார்.
திருப்பூர் மாவட்டத்துக்கான, கண்காணிப்பு அலுவலராக, தமிழக அரசின் கடல்சார் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி வள்ளலார் நியமிக்கப்பட்டுள்ளார். வள்ளலார் நேற்று அவிநாசி ஒன்றியம் மற்றும் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் நடந்து வரும் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.
கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த கூட்டத்தில், கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலையில், கண்காணிப்பு அலுவலர் வள்ளலார், துறைவாரியான பணிகளை ஆய்வு செய்து, பேசியதாவது:
மக்களுடன் முதல்வர் முகாம்கள் வாயிலாக பெறப்படும் விண்ணப்பங்கள் மற்றும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வீட்டுமனை பட்டா கோரி அதிகப்படியான மனுக்கள் பெறப்படுவதால், வருவாய்த்துறையினர் தயாராக வேண்டும்.
தாலுகா எல்லையில் உள்ள, நீர்நிலை புறம்போக்கு அல்லாத, பிற அரசு நிலங்களை கண்டறிய வேண்டும். அடித்தட்டு மக்கள் நலனுக்காக தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்களை பயனாளிகளிடம் சரிவரக் கொண்டு சேர்க்க வேண்டியது ஒவ்வொரு அரசு அலுவலர்களின் கடமை.
மாவட்ட நிர்வாகமும் இதை உறுதி செய்ய வேண்டும்.