/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தெரு நாய் அதிகரிக்க காரணம் என்ன?
/
தெரு நாய் அதிகரிக்க காரணம் என்ன?
ADDED : பிப் 27, 2025 11:17 PM

திருப்பூர்; 'கடந்த, 10 ஆண்டுகளுக்கும் மேலாக தெரு நாய்களுக்கு, கருத்தடை செய்யாததே, அதன் இனப்பெருக்கம் அதிகரிக்க காரணம்' என, கால்நடை பராமரிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திருப்பூரில் நடைபயிற்சி மேற்கொள்வோர், வாகனங்களில் செல்வோர், பாதசாரிகளை தெருநாய்கள் விரட்டி கடிக்கின்றன. புறநகர் பகுதிகளில் கோழி, ஆடு உள்ளிட்ட கால்நடைகளை தெரு நாய்கள் கடித்து கொல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
கால்நடை பராமரிப்புத்துறையினர் கூறியதாவது: கொரோனா சமயத்தில், மக்கள் வீடுகளில் முடங்கியிருந்தனர். தெரு நாய்கள் உணவின்றி வாடின. தெருநாய்கள் இனப்பெருக்கத்துக்கு, கொரோனா காலகட்டத்தை மட்டும் காரணமாக கூற முடியாது. பொதுவாக, ஒரு நாய், ஆண்டுக்கு இரு முறை குட்டி ஈனும்; ஒவ்வொரு முறையும், அதிகபட்சம், 7 முதல், 8 குட்டிகள் ஈனும்; அதன்படி, ஆண்டுக்கு, 15 குட்டி வரை ஈனும்.
கடந்த, 10 ஆண்டுகள் முன்பு வரை நாய்கள் விஷ ஊசி செலுத்தி கொல்லப்பட்டன. விலங்குகள் நல அமைப்பினர் பலர், இதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். எக்காரணம் கொண்டும், விலங்குகளைக் கொல்லக் கூடாது என, விலங்கு நல சட்டமும் கூறியது. தெரு நாய்களை கட்டுப்படுத்த ஏ.பி.சி., எனப்படும் கருத்தடை திட்டம் கொண்டு வரப்பட்டது; இத்திட்டம் சரிவர மேற்கொள்ளப்படவில்லை.
பெண் நாய்களை பொறுத்தவரை, தினசரி, அதிகபட்சம் 5 அல்லது 6 நாய்களுக்கு மட்டுமே கருத்தடை செய்ய முடியும். இப்பணி தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படவில்லை; அதே நேரம், தெரு நாய்களின் இனப்பெருக்கமும், 'மளமள'வென பெருகியது. இனப்பெருக்கத்துக்கும், அதன் கருத்தடை சிகிச்சைக்குமான இடைவெளி மிக அதிகமாக இருப்பது தான், தெரு நாய்களின் இனப்பெருக்கம் அதிகரிக்க முக்கிய காரணம்.மாவட்ட நிர்வாகம் சார்பில், தற்போது தெரு நாய்கள் குறித்த கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. ஏ.பி.சி.,(விலங்குகள் பிறப்பு கட்டுப்பாடு) திட்டத்தை முழுவீச்சில் செயல்படுத்துவது மட்டுமே, அவற்றை கட்டுப்படுத்த ஒரே வழி.இவ்வாறு, அவர்கள் கூறினர்.---