/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தெருநாய்கள் தொல்லைக்கு தீர்வு தான் என்ன? நல வாரிய பிரதிநிதி விளக்கம்
/
தெருநாய்கள் தொல்லைக்கு தீர்வு தான் என்ன? நல வாரிய பிரதிநிதி விளக்கம்
தெருநாய்கள் தொல்லைக்கு தீர்வு தான் என்ன? நல வாரிய பிரதிநிதி விளக்கம்
தெருநாய்கள் தொல்லைக்கு தீர்வு தான் என்ன? நல வாரிய பிரதிநிதி விளக்கம்
ADDED : ஆக 27, 2024 11:41 PM
திருப்பூர்:''தெருநாய்களை கட்டுப்படுத்த தேவைக்கேற்ப நிதி ஆதாரங்களை அரசு வழங்குகிறது. அதற்குரிய கட்டமைப்புகளை உள்ளாட்சி நிர்வாகங்கள் ஏற்படுத்தினால், தெரு நாய்களை வெகுவாக கட்டுப்படுத்த முடியும்'' என்கிறார், இந்திய விலங்கு நலவாரிய பிரதிநிதி முருகேஸ்வரி.
திருப்பூர், அவிநாசி, பல்லடம் என மாவட்டம் முழுக்க பல இடங்களில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்வோர், இரவில், டூவீலரில் வீடு திரும்புவோரை தெரு நாய்கள் விரட்டி கடிக்கின்றன; டூவீலரில் செல்வோரையும் விரட்டுகின்றன.
கடந்த சில மாதங்களாக, கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகளின் வீடுகளில் வளர்க்கப்படும் கோழி, ஆடு போன்றவற்றை தெருநாய்கள் கடித்து, குதறுவதால், கோழி, ஆடு போன்றவை பலியாகின்றன. இதனால், மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
தெருநாய்களுக்கு கருத்தடை செய்வதன் வாயிலாக மட்டுமே அவற்றை கட்டுப்படுத்த முடியும் என்ற சூழ்நிலையில் உள்ளாட்சி நிர்வாகங்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என, கூறப்படுகிறது.
இந்திய விலங்கு நலவாரிய பிரதிநிதிமுருகேஸ்வரி கூறியதாவது:
ஒரு பெண் நாய்க்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய குறைந்தது, ஒரு மணி நேரம் தேவை. ஒரு மையத்தில், மாதம், 80 முதல், 100 நாய்களை மட்டுமே கருத்தடை செய்ய முடியும்; இது போதாது. தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யும் மையங்கள் அதிகளவில் இருக்க வேண்டும். தொடர்ச்சியாக கருத்தடை செய்யும் பணி நடந்து கொண்டே இருக்க வேண்டும்.
மத்திய மற்றும் மாநில விலங்கு நல வாரியம் சார்பில், தெருநாய்களை பிடிப்பதற்கு, அவற்றுக்கு கருத்தடை செய்வதற்கு என, நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது; தடையின்றி வழங்கப்படுகிறது.
உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில், தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்வதற்கான இடம் ஏற்பாடு செய்ய வேண்டும். நான்கு அல்லது ஐந்து மருத்துவர்கள் தொடர்ச்சியாக பணியில் இருக்க வேண்டும்.
தெருநாய்களை பிடித்து கொண்டு வரும் பணி மேற்கொள்ள, தன்னார்வ அமைப்பினர் தயாராக உள்ளனர். எனவே, உள்ளாட்சி நிர்வாகத்தினர், தன்னார்வ அமைப்பினர் என இப்பணியில் தொடர்புடையவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால், தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை வெகு விரைவில் கட்டுப்படுத்தி விட முடியும்.
இவ்வாறு, அவர் கூறினார்.