
திருப்பூர்:திருப்பூர் லோக்சபா தொகுதியில், பிரதானக்கட்சிகளின் வேட்பாளர்கள் ஒவ்வொருவரின் பிரசார யுத்தியும் வேறுவிதமாக அமைந்தது.
திருப்பூர் லோக்சபா தொகுதியில், சுப்பராயன்(இந்திய கம்யூ.,), அருணாச்சலம்(அ.தி.மு.க.,), முருகானந்தம்(பா.ஜ.,), சீதாலட்சுமி(நாம் தமிழர்) உள்பட 13 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கடந்த 15 நாளுக்கும் மேலாக களைகட்டிய தீவிர பிரசாரம் நேற்றுமுன்தினம் நிறைவடைந்தது.
பிரதானக்கட்சிகளின் வேட்பாளர்களின் ஒவ்வொருவரின் யுத்தியும் வித்தியாசமானதாக இருந்தது.
பா.ஜ., முருகானந்தத்தின்
இருநுாறு வாக்குறுதிகள்
பா.ஜ., வேட்பாளர் முருகானந்தம், தனித்துவம் பெற்றதாக அமைந்தது. இடத்திற்கேற்றார் போன்று அவரது பேச்சும், வாக்காளர்களை அணுகும் முறையும் வித்தியாசமானதாக இருந்தது. ''பொதுமக்கள் என்னை எந்த நேரத்திலும் அணுகலாம். உங்கள் பிரச்னைகளைச் செவிமடுப்பதே எனது தலையாய பணி'' என்று கூறிய முருகானந்தம், தனது விசிட்டிங் கார்டையும் வாக்காளர்களிடம் வழங்கினார். நுாறு வாக்குறுதிகள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டார். வாக்காளர்களை அணுகிய பின், மேலும் நுாறு வாக்குறுதிகளையும் இணைத்தார்.
மத்திய அரசு மீது சாடல்
சுப்பராயன் முக்கியத்துவம்
கடந்த முறை தேர்தலில் வென்ற சுப்பராயன், இந்த முறை மீண்டும் வேட்பாளராக களம் காண்கிறார். இந்திய கம்யூ., மூத்த தலைவரான சுப்பராயன், தனது பிரசாரத்தில், தொகுதிக்குத் தான் செய்த சாதனைகளைப் பட்டியலிடுவதைப் பிரதானமாகக் கூறாமல், மத்திய அரசின் மீது தொடர் தாக்குதல்களைக் கையாண்டார். அதேசமயம், தொகுதியில் தான் செய்தவற்றைப் புத்தகமாக, வாக்காளர் மத்தியில் வழங்கினார். தி.மு.க., உள்ளிட்ட கூட்டணிக்கட்சியினர் பிரசாரம் மேற்கொண்டாலும், சுப்பராயனே பிரசாரத்தின் முக்கிய அங்கமாக விளங்கினார்.
அ.தி.மு.க., ஆட்சி நன்மைகள்
அருணாச்சலத்தின் நம்பிக்கை
அ.தி.மு.க., வேட்பாளர் அருணாச்சலம், திருப்பூர் தொகுதியில், அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டுவரப்பட்ட குடிநீர்த்திட்டங்கள், பின்னலாடைத் தொழில்துறைக்குச் செய்த நன்மைகள் உள்ளிட்டவற்றைப் பட்டியலிட்டுப் பேசினார். தி.மு.க., ஆட்சியில் தொழிலுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்று சாடினார். மூத்த வாக்காளர்கள் எனில் காலில் விழுந்து வணங்கி வாக்கு சேகரித்தார். முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் என்று அ.தி.மு.க., நிர்வாகிகள் புடைசூழ இவரது வாக்கு சேகரிப்பு அமைந்தது.
சுற்றுச்சூழல் சிறப்பு
'நாம் தமிழர்' இலக்கு
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி, பிரசாரத்தை பிற வேட்பாளர்களுக்கு முன்னதாகவே துவக்கினார். இவரது நாவன்மை, பிரசாரத்தில் எதிரொலித்தது. 'தொழிலும் வளர வேண்டும்; சுற்றுச்சூழலும் சிறக்க வேண்டும்' என்பதை தனது கருத்தாக பிரசாரங்களின் போது பதிய வைத்தார். இளைய வாக்காளர்கள் மட்டுமின்றி, நடுத்தர, முதிய வாக்காளர்களையும் இலக்காகக் கொண்டு, பிரசாரக் களத்தில் பிரகாசித்தார் சீதாலட்சுமி.
பிரசாரச்சத்தம் ஓய்ந்திருந்தபோதும், வீதிகள் முழுக்க பரபரப்புடன் நேற்று காட்சியளித்தது. தி.மு.க., - அ.தி.மு.க., தரப்பில் 'பணப்பட்டுவாடா' நடந்தது. எந்தப் பிரச்னைகளும், சத்தமும் இன்றி, இது நடந்து முடிந்திருக்கிறது.
கடும் போட்டி நிலவும் தொகுதியாக கருதப்படுகிறது திருப்பூர். இரட்டைப்பதிவு உள்ளிட்ட குறைபாடுகள் இருப்பதால், நுாறு சதவீத ஓட்டுப்பதிவுக்கான சாத்தியங்கள் குறைவு. தங்கள் வாக்கு யாருக்கு என்ற முடிவுடன் வாக்குப்பதிவு செய்ய வாக்காளர்கள் தயாராக உள்ளனர்.
----
'தோழனுக்குத் தோள் கொடுத்தீங்கன்னா
இந்த முறை ஜெயிக்கிறதும் நான்தான்'
இந்திய கம்யூ., வேட்பாளர் சுப்பராயன்
------
'தைக்கிறத பார்த்தவுடனே தெரியுதுல்ல...
தொழில் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பேன்னு'
அ.தி.மு.க., வேட்பாளர் அருணாச்சலம்
------------
''சீமான் அண்ணனைப் போலவே
எங்களோட பேச்சும் அனல் தெறிக்கும்ல'
நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி
----
'வாக்காளர்கள் எழுச்சியோட இருக்காங்க...
வெற்றி நிச்சயம்னு நம்பிக்கை இருக்கு'
பா.ஜ., வேட்பாளர் முருகானந்தம்

