/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பரவலாக பெய்த மழை தீவிரமடைய எதிர்பார்ப்பு
/
பரவலாக பெய்த மழை தீவிரமடைய எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 15, 2024 02:49 AM

உடுமலை;உடுமலை பகுதியில், பரவலாக பெய்து வரும் மழை தீவிரமடைந்து, நிலத்தடி நீர் மட்டம் உயர வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
உடுமலை சுற்றுப்பகுதியில், கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை போதியளவு பெய்யவில்லை; கோடை மழையும் கைகொடுக்காத நிலையில், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக சரிந்தது.
குடிமங்கலம் வட்டாரத்தில், தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றி, தென்னை மரங்களை காப்பாற்றும் நிலை தொடர்கதையாக உள்ளது. இந்தாண்டு, ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழையும் துவங்கவில்லை.
இதனால், பல ஆயிரம் ஏக்கரில், மானாவாரி சாகுபடி கைவிடப்பட்டு, நீண்ட கால பயிரான தென்னை மரங்களை பாதுகாக்கவும் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு உடுமலை பகுதியில் பரவலாக பெய்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, திருமூர்த்தி அணைப்பகுதியில், 16 மி.மீ., அமராவதி அணைப்பகுதியில், 6 மி.மீ., நல்லாறு - 24 மி.மீ., என்றளவில் மழையளவு பதிவாகியிருந்தது. நேற்று பகலிலும், உடுமலை நகரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் மழை பெய்தது; சீதோஷ்ண நிலை மாறியது.
விவசாயிகள் கூறுகையில், 'தற்போது பெய்து வரும் மழை தீவிரமடைந்தால் மட்டுமே நிலத்தடி நீர் மட்டம் உயரும்; ஆடிப்பட்டத்தில் மானவாரி சாகுபடியும் மேற்கொள்ள முடியும். அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தீவிரமடைந்து, அணைகள் நீர் மட்டம் உயரும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம்,' என்றனர்.

