/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊராட்சிகளில் கணக்கெடுப்பு நடக்குமா?
/
ஊராட்சிகளில் கணக்கெடுப்பு நடக்குமா?
ADDED : ஜூலை 06, 2024 11:46 PM
திருப்பூர்;வீடு கட்டும் திட்டங்களுக்கு, புதிய கணக்கெடுப்பு நடத்தி பயனாளிகள் பட்டியல் தயாரிக்க வேண்டுமென, ஊராட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக அரசின், கனவு இல்லம் திட்டம், நடப்பு ஆண்டு அமலுக்கு வந்துள்ளது; இந்தாண்டில், தலா, 3.50 லட்சம் ரூபாய் மானியத்துடன், ஒரு லட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
இருப்பினும், தமிழக அரசின் நிபந்தனைகளால், 10 சதவீத வீடுகள் கூட கட்ட முடியாத நிலை ஏற்பட்டது. தற்ேபாது சிறிய தளர்வு வழங்கப்பட்டுள்ளது. துவக்கத்தில், குடிசைகளில் வசிப்பவர் மட்டும் பயனாளிகள் என்றதால், 17 மாவட்டங்களில் பயனாளிகள் தேர்வு மிக சொற்பமாக இருந்துள்ளது.
மண் சுவர், தகர சீட் வேய்ந்த வீடுகள், பழைய வீடுகளில் வசிப்பவ ரும் புதிய வீடு கட்டலாம் என, அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து, மீண்டும் பயனாளிகளை கண்டறியும் பணி வேகமெடுத்துள்ளது.
மத்திய, மாநில அரசுகளின், வீடு கட்டும் திட்டங்களில் பயன்பெற, மாநில அளவில் பராமரிக்கப்படும் பட்டியலில் பெயர் இருக்க வேண்டும். இல்லாதவர்கள், எந்த திட்டத்திலும் பயன்பெற முடியாது.
விடுபட்ட பெயர்கள்
வீடு கட்டும் திட்டங்களுக்கான கணக்கெடுப்பு, 2017ல் தனி அலுவலர்கள் பொறுப்பில் இருந்த நேரத்தில் நடத்தப்பட்டது. வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்தவில்லை; மனு கொடுத்தவர் பெயர் மட்டுமே சேர்க்கப்பட்டது. போதிய விழிப்புணர்வு இல்லாததால், ஏழைகளின் பெயர், பட்டியலில் இடம்பெறாமல் விடுபட்டது.
விண்ணப்பித்து காத்திருந்தவர் பெயர்களும், இடம்பெறவில்லை. இத்திட்டத்தில் வீடு கட்டலாம் என்று காத்திருந்தோருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
தனி அலுவலர்கள் பொறுப்பில் இருந்த போது, கணக்கெடுப்பு முறையாக நடக்கவில்லை. எனவே, புதிய கணக்கெடுப்பு நடத்திய பிறகு, பயனாளிகளை இறுதி செய்ய வேண்டும். தமிழக அரசு, ஊரகப்பகுதிகளுக்கான வீடு கட்டும் திட்டங்களுக்கான பயனாளிகள் பட்டியல் தயாரிப்பை, மீண்டும் செம்மைப்படுத்தி துவக்க வேண்டும் என, ஊராட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கனவாகிவிடக்கூடாது
வீடு கட்டும் திட்டங்களுக்கான பயனாளிகளை கண்டறிய, முறையான கணக்கெடுப்பு நடக்கவில்லை. உத்தேச பட்டியலை இறுதி செய்துவிட்டனர். நுாற்றுக் கணக்கான பயனாளிகள் விடுபட்டுள்ளனர்; ஏழை எளிய மக்கள் பயன்பெற வேண்டும் என்பதால், மீண்டும் ஒருமுறை கணக்கெடுப்பு நடத்தி, பயனாளிகள் பட்டியல் தயாரிக்க வேண்டும். இல்லாதபட்சத்தில், கனவு இல்லம் திட்டம், ஏழைகளின் கனவாகவே போய்விடும். இதுகுறித்து, கலெக்டர் மற்றும் அமைச்சர்கள் வாயிலாக அரசுக்கு தெரியப்படுத்தியுள்ளோம்
- கணேசன், ஒருங்கிணைப்பாளர்,
மாவட்ட ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு.