/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நீர்நிலையில் ஆக்கிரமிப்பு 'சுங்கச்சாவடி' அகற்றப்படுமா?
/
நீர்நிலையில் ஆக்கிரமிப்பு 'சுங்கச்சாவடி' அகற்றப்படுமா?
நீர்நிலையில் ஆக்கிரமிப்பு 'சுங்கச்சாவடி' அகற்றப்படுமா?
நீர்நிலையில் ஆக்கிரமிப்பு 'சுங்கச்சாவடி' அகற்றப்படுமா?
ADDED : ஆக 22, 2024 12:29 AM
திருப்பூர் : கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், சப் கலெக்டர் சவுமியா தலைமையில், திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலக அரங்கில் நேற்று நடந்தது. விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து, விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் மனு அளித்து, பேசினர்.
மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி:
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் செயல்பாட்டுக்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஆண்டிபாளையம் கிராமம் முழுதும் திருப்பூர் மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ளது. பெரியாண்டிபாளையம்,எஸ்.ஆர்., நகர், சின்னியகவுண்டன்புதுார், குளத்துப்புதுார், குள்ளே கவுண்டன்புதுார், கோழிப்பண்ணை,சின்னாண்டிபாளையம் ஊர்களை உள்ளடக்கிய ஆண்டிபாளையம் கிராமத்தில், வி.ஏ.ஓ., பணியிடம் காலியாக உள்ளது.
மங்கலத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வி.ஏ.ஓ., கூடுதலாக ஆண்டிபாளையத்தை கவனிக்கிறார். இப்பகுதி பொதுமக்கள், மாணவர்கள், விவசாயிகள் பல்வேறு சான்றுகளை உரிய காலத்துக்குள் பெறமுடியாமல் தவிக்கின்றனர். ஆண்டிபாளையத்துக்கு புதிதாக வி.ஏ.ஓ., நியமிக்கவேண்டும்.
மாவட்ட பதிவுத்துறை அலுவலகம் நெருப்பெரிச்சலில் செயல்படுகிறது. இங்கு, மாவட்ட பதிவாளர் அலுவலகமும் தொட்டிபாளையம் அலுவலகமும் மாடியில் இயங்குகிறது. இந்த அலுவலகத்தில் லிப்ட் பழுதாகியுள்ளதால், முதியவர்கள், நோயாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
மாவட்ட பதிவாளர் பணியிடம் காலியாக உள்ளதால், மேல் முறையீட்டு மனுக்கள் மீது தீர்வு காண்பதில் சிக்கல் ஏற்படுகிறது. காலியாக உள்ள மாவட்ட பதிவாளர் இடத்துக்கு புதிய அதிகாரியை நியமிக்கவேண்டும்.
சுங்கச்சாவடி விவகாரம்
வேலம்பட்டி சுங்கச்சாவடி, குட்டையை ஆக்கிரமித்து கட்டியுள்ளது குறித்து விவசாயிகள் கேள்வியெழுப்பினர். வருவாய்த்துறை அதிகாரிகளுடன் கலந்துபேசி, உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென, சப் - கலெக்டரும் உறுதி அளித்துள்ளார்.
விவசாயிகள் கூறியதாவது:
அவிநாசிபாளையம் அருகே, வேலம்பட்டியில் அமைத்த சுங்கச்சாவடி, குட்டையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. வருவாய்த்துறை அதிகாரிகள் சர்வே செய்து, அதனை உறுதி செய்துள்ளனர். ஐகோர்ட்டில், 2022 மார்ச்சில் வழக்கு தொடர்ந்ததால், 90 நாட்களுக்குள் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிடப்பட்டது.
குட்டைக்குள் மின் இணைப்பு பெற்றுள்ளதை சுட்டிக்காட்டி, வருவாய்த்துறை அதிகாரிகளும், ஆக்கிரமிப்பை அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளனர். இருப்பினும், ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை; எனவே, வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் கோர்ட் உத்தரவை செயல்படுத்தும் வகையில், குட்டையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.