/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மற்றொரு ' மிஸ்டர் கூல் ' டி20 கேப்டனாக மிளிர்வாரா சூர்யகுமார்?
/
மற்றொரு ' மிஸ்டர் கூல் ' டி20 கேப்டனாக மிளிர்வாரா சூர்யகுமார்?
மற்றொரு ' மிஸ்டர் கூல் ' டி20 கேப்டனாக மிளிர்வாரா சூர்யகுமார்?
மற்றொரு ' மிஸ்டர் கூல் ' டி20 கேப்டனாக மிளிர்வாரா சூர்யகுமார்?
ADDED : ஆக 04, 2024 05:12 AM

இலங்கை சென்ற இந்திய அணி, டி - 20 தொடரில் அசத்தல் வெற்றி பெற்றது. முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய இந்திய அணி, மூன்றாவது போட்டியில் சூப்பர் ஓவரில் எளிதில் வென்றது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் வகுத்த வியூகம் ரசிகர்களை கவர்ந்தது. இருப்பினும் ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், சுப்மன் கில் உள்ளிட்டோர் கேப்டன் பதவியை அலங்கரிக்க தயாராக இருக்கின்றனர். இதோ, திருப்பூர் பகுதி கிரிக்கெட் ஆர்வலர்கள் கருத்துகள்...
செல்லமுத்து, இணைச்செயலாளர், மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன்: பேட்டிங்கில் அசத்தும் சூர்யகுமார்யாதவ், கேப்டனாக தொடரலாம். அனுபவம், முடிவெடுக்கும் திறன் அடிப்படையில் பார்த்தால், தற்போதுள்ள கேப்டன், அணி வீரர்களே தொடரலாம். சரியான நேரத்தில், தெளிவான முடிவுகளை சூர்யகுமார் எடுக்கிறார். அதே நேரம், தேர்வுக்குழு புதியவர்களுக்கும் வாய்ப்பு தர வேண்டும். திறமையான பவுலிங், பேட்டிங், ஆல்ரவுண்டர்கள் காத்திருப்பில் உள்ளனர்; அவர்களுக்கும், முக்கியத்துவம் தர வேண்டும்.
ஷான் ரஹ்மான், லட்சுமி நகர்: இந்தியாவின் தலைசிறந்த டி20 கேப்டனாக சூர்யகுமார் திகழ்கிறார். ஏபிடி.வில்லியர்ஸ்க்கு பின், 'மிஸ்டர் 360 டிகிரி' என, இவரை பாராட்டலாம். அப்படியொரு திறமை காட்டுகிறார். அடுத்த வாய்ப்பு சுப்மன்கில்லுக்கு கொடுக்கலாம். 'ஆக்டிவ்' ஆன வீரர். கோலி போன்றே பணியாற்றுவார். ஹர்திக் பாண்டியாவும் சிறந்த வீரர் தான்; 'பிட்னெஸ்' சரியாக வேண்டும். ஆஸி., அணி கம்மின்ஸ் போல, பும்ராவை கேப்டனாக மாற்றலாம். பவுலராக இருந்து கொண்டு சாதிக்கும் திறமை அவரிடம் உள்ளது.
சுனில்குமார், கல்லம்பாளையம்: சூர்யகுமார், தோனியை போல் 'கூல்' ஆன கேப்டன். கடைசியாக நடந்த போட்டி ஒரு உதாரணம். கடைசி ஓவரில் ஆறு ரன் தேவை என்ற போது 'ரிலாக்ஸாக' பந்து வீசி இரண்டு விக்கெட் வீழ்த்தினார். கடைசி பந்தில் ஒரு பவுண்டரி அடித்திருந்தால் கூட ஆட்டமே மாறியிருக்கும். ஆனால், அப்போது, சிறப்பாக பந்து வீசி, மூன்று ரன் மட்டும் கொடுத்தார்.
போட்டி 'டை'யான போதும், சூப்பர் ஓவரிலும் சிறப்பாக பேட்டிங் செய்து அசத்தினர். சூப்பர் ஓவரில் எதிர்பாராத வகையில் பந்துவீச்சாளர் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கொடுக்க ஒரு 'தில்' வேண்டும். பேட்டிங், பவுலிங் செய்வதோடு, சிறந்த முடிவெடுக்க கூடிய கேப்டன், சூர்யகுமார் மட்டுமே. அவரே கேப்டனாக தொடரலாம்.
கோவிந்தசாமி, உடற்கல்வி ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, குண்டடம்: புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் சூர்யகுமாருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஏற்கனவே இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றதால், மூன்றாவது போட்டியில் துணிச்சலாக புதிய பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார். சூப்பர் ஓவரிலும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடிந்து விட்டது. ஆட்டத்தை முழு பொறுப்பில் எடுத்துக் கொண்டார். பெரும்பாலும் அரசியல் தலையீடுகளால், நல்ல திறமையான வீரருக்கு வாய்ப்பு தருவதில்லை. ரஞ்சி போட்டியை தாண்டியும் செல்ல பல வீரர்களுக்கு வாய்ப்புகளை தர வேண்டும்.