UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 07:44 PM
திருப்பூர்: தமிழக அரசு சார்பில் பின்னலாடை வாரியம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜவுளித்துறை கமிஷனர் தலைமையில் தொழில்துறையினருடன் ஆலோசனை நடத்தி, அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அரசு தரப்பில் நிதி ஒதுக்கீடு இல்லாததால், தொழில் அமைப்புகள் இணைந்து அரசு அதிகாரிகளுடன் வாரியத்தை நடத்துவது தொடர்பாக ஆலோசித்து வருகின்றன.
‘டீமா’(திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கம்) தலைவர் முத்துரத்தினம் கூறுகையில், ‘‘குறு, சிறு நிறுவனங்களின் பிரச்னைகளும், பெரிய ஏற்றுமதி நிறுவனங்களின் தேவைகளும் மாறுபட்டவை. நிட்டிங், சாயம், எம்ப்ராய்டரி, பிரின்டிங் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளையும் ஒருங்கிணைத்து செயல்படும் வகையில், அனைத்து தரப்பினருக்கும் பொதுவான தலைமை தேவை. எனவே, பின்னலாடை வாரியத்துக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரியை தலைவராக நியமிக்க வேண்டும். இல்லையெனில், குறு, சிறு தொழில் அமைப்புகளில் இருந்து ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை விடுப்போம்’’ என்றார்.
முத்துரத்தினம் படம் வைக்கவும்.
