/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பஸ் ஸ்டாண்டில் 'ரேஸ்' நடக்குதா?
/
பஸ் ஸ்டாண்டில் 'ரேஸ்' நடக்குதா?
ADDED : ஏப் 29, 2024 01:48 AM

திருப்பூர்;'ஸ்மார்ட்சிட்டி' திட்டத்தின் கீழ், திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் விரிவுபடுத்தி கட்டப்பட்டாலும், பஸ்களுக்கான 'ரேக்' சரிவர வகுக்கப்படவில்லை. 'பீக்ஹவர்' நேரங்களில், 'ரேக்'கில் நிறுத்தாமல் நடுவழியில் பஸ் நிறுத்தப்படுவதும், இரவு நேரங்களில் 'ரேஸில்' பங்கேற்பது போல் பஸ்கள் 'ரேக்'குக்கு வெளியே வழித்தடத்தில் நிறுத்துவதும் தொடர்கதையாக உள்ளது.
வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை பயணிகள் எண்ணிக்கை அதிகம் என்பதால், பஸ் ஏற வரும் பாதசாரிகள், பயணிகள் பாடு சிரமமாக உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஐந்து பஸ்கள் வழித்தட வரிசையில் நின்றன. டிரைவர்கள் அப்படியே விட்டுவிட்டு இறங்கி சென்றதால், பின் தொடர்ந்து பிற பஸ்கள், பஸ் ஸ்டாண்டுக்குள் வர முடியவில்லை. ஏர்ஹாரன் ஒலியை தொடர்ந்து எழுப்பியபடி, பஸ்கள் முன்னேற முற்பட அங்கிருந்தவர்களால், தொடர் ஹாரன் சத்தத்தை கேட்கவே முடியவில்லை; பதறிப்போயினர்.
பயணிகள் கூறுகையில், ''இரவு நேரத்தில் பஸ் ஸ்டாண்டில் போலீஸ் கண்காணிப்பு இல்லை; ஒரு போலீசார் கூட இருப்பதில்லை. போக்குவரத்து கழக அலுவலர்களும் பணி முடிந்தால், புறப்பட்டு சென்று விடுகின்றனர். டிரைவர், நடத்துனர் இரவு, 8:00 மணிக்கு மேல் அவரவர் சவுகரியத்துக்கு நிறுத்துகின்றனர்; கவனிக்க ஆளில்லை. வேலை முடிந்து பஸ் ஏறி பயணிக்க காத்திருப்போருக்கு சிரமமாக உள்ளது. இரவில் பஸ்கள் 'ரேக்'கில் நிறுத்தப்படுகிறதா என்பதை போக்கு வரத்து அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்.
உரிய இடங்களில் பஸ் நிறுத்தாத டிரைவர்களை எச்சரிக்க வேண்டும். இரவில் ஓரிரு போலீசாராவது பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்'' என்றனர்.

