/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் மனுக்களுக்கு தீர்வு கிடைக்குமா?
/
'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் மனுக்களுக்கு தீர்வு கிடைக்குமா?
'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் மனுக்களுக்கு தீர்வு கிடைக்குமா?
'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் மனுக்களுக்கு தீர்வு கிடைக்குமா?
ADDED : ஜூலை 11, 2024 10:23 PM

உடுமலை : 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தின் கீழ், சோமவாரப்பட்டியில், மூன்று ஊராட்சி மக்களிடம், 15 அரசுத்துறைகள் சார்பில், மனுக்கள் பெறப்பட்டன.
தமிழக அரசு, 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தின் கீழ், 15 அரசுத்துறையினரிடம் நேரடியாக மக்கள் மனுக்கொடுக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, குடிமங்கலம் ஒன்றியம், சோமவாரப்பட்டியில், விருகல்பட்டி, புக்குளம் மற்றும் சோமவாரப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மக்களிடம் இருந்து மனுக்கள் பெறும் முகாம் நேற்று நடந்தது.
செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தனர்.
இதில், ஊரக வளர்ச்சித்துறை, மின்வாரியம், வருவாய்த்துறை உள்ளிட்ட துறையினர், மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டனர். உடனடி தீர்வு காணப்படாத மனுக்களுக்கு, ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டது.நேற்று காலை, 9:30 மணி முதலே, நுாற்றுக்கணக்கான மக்கள், மனுக்களுடன் முகாமில் திரண்டனர். பல்வேறு காரணங்களால், மனுக்கள் பெற தாமதம் ஆனதால், நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் மனுக்கொடுத்தனர்.
முகாமில், சில பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. சோமவாரப்பட்டி ஊராட்சித்தலைவர் விமலா உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளும் முகாமில் பங்கேற்றனர்.
முகாமில், ஆயிரக்கணக்கான மனுக்கள் குவிந்துள்ள நிலையில், உரிய தீர்வு கிடைக்குமா என்ற கேள்விக்குறியோடு மக்கள் திரும்பிச்சென்றனர்.
அமைச்சர் ஆய்வு
உடுமலையில், பி.ஏ.பி., பொதுக்கால்வாய் பராமரிப்பு பணி மற்றும் தளி எத்தலப்பர் அரங்கம் ஆகியவற்றை அமைச்சர் ஆய்வு செய்தார்.
உடுமலை அருகே, திருமூர்த்தி நகர், நீர் வளத்துறை ஆய்வு மாளிகை பகுதியில், சுதந்திர போராட்ட வீரர் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் அரங்கம் மற்றும் நகராட்சி வளாகத்தில் சிலை அமைக்க, ரூ.2.53 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
இதனை அமைச்சர் சாமிநாதன், திருப்பூர் கலெக்டர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அதே போல், பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ், திருமூர்த்தி அணையிலிருந்து, பிரதான கால்வாய் மற்றும் உடுமலை கால்வாய் வரை அமைந்துள்ள பொது கால்வாய், ரூ.8.55 கோடி மதிப்பில் பணி நடந்து வருகிறது.
இதனையும் ஆய்வு செய்த அமைச்சர், விரைவில் பணியை நிறைவு செய்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தினார்.

