/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் மாநகராட்சிக்கு விருது கிடைக்குமா?
/
திருப்பூர் மாநகராட்சிக்கு விருது கிடைக்குமா?
ADDED : ஆக 04, 2024 05:15 AM

சுதந்திர தின விழாவின்போது சிறப்பாக பணியாற்றிய உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படும் விருதை, திருப்பூர் மாநகராட்சி பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சுதந்திர தின விழாவின் போது, தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றிய உள்ளாட்சி அமைப்புகளுக்கு விருது வழங்கப்படுகிறது. இவ்விருது பெற தகுதியான உள்ளாட்சி அமைப்புகளில் அதன் பணிகள், செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு தரவுகள் ஆய்வு செய்து மதிப்பீடு செய்யப்படும். அதன் அடிப்படையில் இந்த விருது வழங்கப்படுகிறது.
திருப்பூர் மாநகராட்சியில் கடந்த ஓராண்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், நிர்வாகச் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடந்தது. இதற்கு பொறுப்பாளராக தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த இரு நாட்களாக தாம்பரம் மாநகராட்சியின் இரு அலுவலர்கள், திருப்பூர் மாநகராட்சியின் பணிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்தனர்.
மாநகராட்சியின் விவரங்கள்; அலுவலர், பணியாளர் எண்ணிக்கை. எல்லைப் பகுதிகள்; வருவாய் இனங்கள்; வளர்ச்சித் திட்டப்பணிகள்; கையாளப்படும் நிதிகள்; அரசு துறை மானிய திட்டங்கள் நிறைவேற்றம்; மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் நிலை உள்ளிட்டவை குறித்து மாநகராட்சி மைய அலுவலகத்தில் விரிவான ஆய்வு நடந்தது.
விருது பெறுவதற்கான தேர்வுக்கு பல்வேறு வகை மதிப்பீடுகள் மூலம் மதிப்பெண் நிர்ணயிக்கப்படுகிறது. ஆய்வுக்குப் பின், மாநகராட்சி பகுதியில் நடைபெறும் மற்றும் நிறைவு பெற்ற கட்டுமானப் பணிகள்; மருத்துவமனை மற்றும் சுகாதார வளாகங்கள்; பூங்காக்கள், கட்டுப்பாட்டு அறை உள்ளிட்டவற்றில் கமிஷனர் பாலச்சந்தர் நேரில் சென்று பார்வையிட்டார்.