ADDED : மார் 07, 2025 11:08 PM

''கனவு மெய்ப்பட வேண்டும்; கை வசமாவது விரைவில் வேண்டும்...'' என்றார் பாரதியார். அப்படியான ஒரு கனவை சுமந்து, நனவாக்கி, குறுகிய காலத்தில், வளர்ச்சி பெற்றிருக்கிறார், திருப்பூர், காலேஜ் ரோடு, போஸ்ட் ஆபீஸ் காலனியில் 'உயிர்' இயற்கை விவசாயிகள் நேரடி விற்பனை நிலையம் வைத்திருக்கும் சுஜிதா.
'பெண்களும் சாதிக்கப் பிறந்தவர்களே...' என்பதற்கு உதாரணமாக, சாதிக்காட்டிய சுஜிதா தனது அனுபவம் குறித்து பேசினார்...
பெண்கள், கல்வி பயில்வதே சவாலானது தான். அதனைக்கடந்து, சொந்தமாக தொழில் துவங்குவது என்பது, அதை விட சவாலானது. தனியார் கல்லுாரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்தேன். என் மகனுக்கு ஊட்டச்சத்து உணவு வாங்க, 'உயிர்' இயற்கைப் பொருள் குறித்து அறிந்து, அப்பொருட்களை வாங்கி, கொடுத்தேன்; திருப்தியாக இருந்தது.
அதனால், அங்காடி அமைத்து தொழில் துவங்கினேன். உறவினர்கள், நண்பர்கள் என, 10 பேரை வாடிக்கையாளர்களாக கொண்டு, அவர்கள் வாயிலாக, பலரும் இயற்கை பொருட்களின் நன்மையறிந்து, எங்களிடம் வாங்கத் துவங்கினர். எங்களது, 5 ஆண்டு பயணத்தில், தற்போது, 10 ஆயிரம் குடும்பங்களுக்கு இயற்கை பொருட்களை வழங்கி வருகிறோம்.
அங்காடி திறந்த, 20 நாளில் கொரோனாவால், ஊரடங்கு வந்தது. சவாலான காலகட்டத்தில், தினமும், 100 பேருக்காவது, இயற்கை உணவுப் பொருட்களை 'சப்ளை' செய்தோம். கொரோனா காலத்தில், இயற்கை உணவுப்பொருட்கள் மீதான ஆர்வமும், மக்கள் மத்தியில் அதிகரிக்க துவங்கியது. சிறு தானியம், தேன் வகைகள், மரச்செக்கு எண்ணெய், பாரம்பரிய அரிசி, சிறு தானியம் ஆகியவற்றை மக்கள் அதிகம் வாங்குகின்றனர்.
இயற்கை பொருள் அங்காடியை நிலை நிறுத்திய பின், 'பியூட்டி பார்லர்' துவங்கினேன். தற்போது, அதுவும் சிறப்பாக நடக்கிறது. குடும்பம், குழந்தைகள், சமுதாயம் என அனைத்து தரப்பில் இருந்தும், பெண்களுக்கு பொறுப்பு அதிகம்; அவை சார்ந்த நெருக்கடிகளும், சவால்களும் வரத்தான் செய்யும். தொழிலில் நிதி திரட்டல் தான் மிகப்பெரும் பிரச்னை. அனைத்தையும் சமாளிக்கும் ஆற்றலை பெற்றுவிட்டால், வெற்றி வசமாகும். ஒவ்வொரு விஷயத்தையும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். 'அப்டேட்' செய்து கொண்டே இருக்க வேண்டும்.
அவர் கூறினார்.