/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெண்கள் உடல்நலன்: யோகா எப்படி உதவும்?
/
பெண்கள் உடல்நலன்: யோகா எப்படி உதவும்?
ADDED : ஜூலை 01, 2024 01:50 AM
பெண்கள் யோகா பயிற்சி பெறுவது, அந்த குடும்பத்தோடு சமூகத்தையும் மேம்படுத்தும். பெண்கள் தங்கள் அன்றாட வாழ்வில் பல்வேறு காரணங்களால் மன அழுத்தத்துக்கு ஆளாக நேரிடுகிறது. இதுதவிர, பல்வேறு நோய்கள், உடல் உபாதைகளையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
பள்ளிக் கல்வி பெறும் சிறுமிகள் தொடங்கி, கல்லுாரி மாணவிகள், அலுவலகம் செல்வோர், இல்லத்தரசிகள், தொழில் முனையும் மகளிர், உடல் உழைப்பு தொழிலாளர், மகளிர் தொழிலதிபர்கள் என அனைவருக்கும் நோயற்ற வாழ்வு அவசியம்.
உடலை ஆரோக்கியமாகவும், வலுவாகவும், மனதை நம்பிக்கையுடனும், தைரியத்துடனும் வைத்திருந்தால்தான் தொடர்ந்து பல சாதனைகளை படைக்க முடியும். யோகா அதற்கு துணை புரியும்.
பெண்களுக்கு பரவலாக ஏற்படும் உடல்நல பாதிப்புகள், முறையாக பயிற்சி பெற்று யோகாசனம் செய்வதால், அந்த பாதிப்புகளை எவ்வாறு கட்டுப்படுத்தலாம், எப்படி வராமல் தவிர்க்கலாம் என்பதற்கான அறிமுகம்தான் இது. மருத்துவர் ஆலோசனையுடன், நன்கு யோகா கற்ற ஆசிரியரிடம் பயின்று, முறையாக யோகப் பயிற்சிகளை மேற்கொண்டால், ஆரோக்கியமான வாழ்வை பெறுவது உறுதி.
முதுகுவலி வராது
முதுகு தண்டுவடம் மற்றும் அதை ஒட்டியுள்ள எலும்புகள், மூட்டுகள், நரம்புகள், சதைகள் ஆகியவற்றில் ஏற்படும் பாதிப்புகள்தான் பெரும்பாலும் முதுகு வலிக்கு காரணமாகின்றன. பித்தப்பை, கணையத்தில் ஏற்படும் பாதிப்புகளும் முதுகுவலியை ஏற்படுத்தக்கூடும்.
நிற்பது, நடப்பது, படுப்பது, வேலை செய்வது ஆகிய சூழல்களில் உடலை சரியான நிலையில் வைக்காமல் இருப்பது (Bad Pos ture) முதுகுவலியை ஏற்படுத்தும். சலபாசனம், புஜங்காசனம். திரிகோணாசனம்,மர்ஜரியாசனம், உஷ்ட்ராசனம், மகராசனம், அர்த்த மத்ஸ்யேந்திராசனம் போன்ற ஆசனங்களை முறையாக செய்தால் முதுகுவலி வராமல் தடுக்கலாம்.
உடல் பருமனைதடுக்கலாம்
உடலில் அளவுக்கு மீறி கொழுப்பு அதிகரிப்பதால், உடல் பருமனாகிறது. செயல்பாடு இன்றி இருப்பது, தவறான உணவு பழக்கம், தூக்க குறைபாடு போன்றவற்றால் உடல் பருமன் ஏற்படுகிறது. இதை கவனிக்காமல் விட்டால், நாளடைவில் உயர் ரத்த அழுத்தம், இதய கோளாறுகள் போன்றவற்றுக்கும் காரணமாகிறது.
எனவே, உடல் பருமன் ஆகாமல் பார்த்துக் கொள்வது அவசியம். பச்சிமோத்தாசனம், உஷ்ட்ராசனம், திரிகோணாசனம், பவனமுக்தாசனம், உத்தானபாதாசனம், சர்வாங்காசனம். ஹாலாசனம், மத்ஸ்யாசனம் உள்ளிட்ட யோகாசனங்கள் உடல் பருமனை குறைக்கும்.
தைராய்டு சுரப்பு சீராகும்
மூளை, இதயம், தசைகள், இதர உறுப்புகள் சரியாக இயங்க தேவையான ஹார்மோன்களை தைராய்டு சுரப்பி வெளியிடுகிறது. இதன் அளவு கூடினால், ஹைப்பர் தைராய்டு என்றும், குறைந்தால் ஹைப்போ தைராய்டு என்றும் அழைக்கப்படுகிறது. இதன் ஏற்ற இறக்க பாதிப்புகள் நாளடைவில் இதய துடிப்பு விகிதம், மூளை செயல்பாடு போன்றவற்றை பாதிக்கக்கூடும். தனுராசனம்.
சர்வாங்காசனம், ஹாலாசனம், சுப்த வஜ்ராசனம், புஜங்காசனம், மத்ஸ்யாசனம், உஷ்ட்ராசனம் போன்ற ஆசனங்களை செய்வது. தைராய்டு சுரப்பை சீராக வைத்திருக்க உதவும்.
நீரிழிவு நோய் கட்டுப்படும்
ரத்தத்தில் உள்ள சர்க்கரையை ஒழுங்குபடுத்தும் ஹார்மோன் இன்சுலின். கணையம் அதை போதுமான அளவு சுரக்காவிட்டாலோ, உற்பத்தியாகும் 5 இன்சுலினை உடல் பயன்படுத்த முடியவில்லை என்றாலோ, ரத்த சர்க்கரை அதிகரிக்கும். இதுவே சர்க்கரை நோய், நீரிழிவு நோய்.
உடல் பருமன், தவறான உணவு பழக்கம் மட்டுமின்றி, பரம்பரை ரீதியாகவும் நீரிழிவு பாதிப்பு வரக்கூடும். உத்தானபாதாசனம், மத்ஸ்யாசனம், அர்த்த மத்ஸ்யேந்திராசனம், பரிவிருத்த திரிகோணாசனம், தனுராசனம், ஹாலாசனம், பச்சிமோத்தாசனம் உள்ளிட்ட யோகாசனங்கள் நீரிழிவு நோய் பாதிப்பை கட்டுப்படுத்தும்.
கர்ப்பப்பை பாதிப்பு
கர்ப்பப்பையில் உருவாகும் நீர்க்கட்டிகளால் நாளடைவில் கர்ப்பப்பை பெரிதாகி, ஹார்மோன் சுரப்பில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், மாதவிடாய் கோளாறுகள், முட்டை உற்பத்தி பாதிப்பு. இதன் தொடர்ச்சியாக கருத்தரிப்பின்மை, கருச்சிதைவு, குறை பிரசவம் போன்ற பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
பத்தகோணாசனம், சுப்த பத்தகோணாசனம், பரத்வாஜாசனம், சக்கிசலனாசனம் போன்றவற்றை முறையாக செய்து வருவதால், கர்ப்பப்பை பாதிப்புகள் வராமல் தடுக்கலாம். உள்ளுறுப்புகளின் செயல்பாடும் மேம்படும்.