/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குடிநீர் பிரச்னையை தீர்க்க மகளிர் மனு
/
குடிநீர் பிரச்னையை தீர்க்க மகளிர் மனு
ADDED : மார் 07, 2025 10:58 PM

பல்லடம்; பல்லடம் ஒன்றியம், கரைப்புதுார் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், குடிநீர் சரியாக வினியோகிக்கப்படுவதில்லை; சில, குடிநீர் வினியோகிப்பாளர்கள், முறையான பதில் தருவதில்லை என்று குற்றம் சாட்டிய பொதுமக்கள், கடந்த சில தினங்களுக்கு முன், கரைப்புதுார் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்து வந்த பி.டி.ஓ., கனகராஜ், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். முறையான குடிநீர் வினியோகத்துக்கு நடவடிக்கை எடுப்பதாகவும், குற்றம் சாட்டப்பட்ட குடிநீர் வினியோகிப்பாளர்கள் மாற்றப்படுவார்கள் என்றும் தெரிவித்திருந்தார். அதன்படி, நேற்று முன்தினம், குடிநீர் வினியோகிப்பாளர்கள் சிலர் வெவ்வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, குடிநீர் வினியோகிப்பாளர்கள் கரைப்புதுார் ஊராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்த பி.டி.ஓ., பணியிட மாற்றம் செய்யப்படாது என உறுதி அளித்ததும், குடிநீர் வினியோகிப்பாளர்கள் கலைந்து சென்றனர்.
தொடர்ந்து, சிறிது நேரத்தில் ஊராட்சி அலுவலகம் வந்த பொதுமக்கள், குடிநீர் வினியோகிப்பாளரை மாற்றக்கூடாது என்றும், குப்பை பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்த கோரியும் மனு அளித்தனர்.
பொதுமக்கள் கூறுகையில், 'இதற்கு முன், ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்று வந்த குடிநீர், தற்போது, 2 - 3 நாட்களுக்கு ஒரு முறை என்று வினியோகிக்கப்படுகிறது. எனவே, குடிநீர் வினியோகிப்பாளரை மாற்றுவதால் எந்த பயனும் இல்லை.
இதேபோல், தினசரி, வீடுகளுக்கே வந்து குப்பை சேகரித்து வந்த பணியாளர்களை சமீப நாட்களாக காணவில்லை. வார்டுகளில், குப்பைகள் நிரம்பி வழிகின்றன. தேங்கி இருக்கும் குப்பைகளை அகற்றுவதுடன், தினசரி குப்பைகளை சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.