/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
20 ஆண்டாக தொழிலாளி; 'தாட்கோ' உதவியால் முதலாளி
/
20 ஆண்டாக தொழிலாளி; 'தாட்கோ' உதவியால் முதலாளி
ADDED : ஆக 30, 2024 11:27 PM

திருப்பூர்:திருப்பூர், தொட்டிபாளையம், குலாம் காதர் கார்டன் பகுதியில், சாமிநாதன் என்பவர், தாட்கோ கடன் 5 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் பெற்று, ஸ்கிரீன் பிரின்டிங் நிறுவனம் செயல்படுத்திவருகிறார்.
'நிறைந்தது மனம்' என்கிற நிகழ்ச்சியில், கலெக்டர் கிறிஸ்துராஜ், நேற்று இந்த ஸ்கிரீன் பிரின்டிங் நிறுவனத்தில் ஆய்வு நடத்தினார். பின், கலெக்டர் கூறியதாவது:
திருப்பூர் மாவட்டத்தில், தொழில்முனைவோர் ஏராளமானோர், தாட்கோ திட்டத்தில் கடன் பெற்று, போட்டோ ஸ்டுடியோ, மொபைல்போன் விற்பனை, பழுதுநீக்கம், உணவகம், ஆடை உற்பத்தி சார்ந்த தொழில்கள், பாத்திரக்கடை என பல்வேறுவகை தொழில்துவங்கி, செயல்படுத்திவருகின்றனர்.
கடந்த 2021 - 22ம் நிதியாண்டில், 187 பயனாளிகளுக்கு 4.14 கோடி ரூபாய்; 2022 - 23ம் நிதியாண்டில், 68 பேருக்கு 3.85 கோடி; 2023 - 24ம் நிதியாண்டில் 468 பயனாளிகளுக்கு 11.10 கோடி என, 723 பயனாளிகளுக்கு, 19.09 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, கலெக்டர் கூறினார்.
ஸ்கிரீன் பிரின்டிங் நிறுவன உரிமையாளர் சாமிநாதன் கூறுகையில், 'கடந்த 20 ஆண்டுகளாக ஸ்கிரீன் பிரின்டிங் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்துவந்தேன். தாட்கோ மூலம் கடன் பெற்று, சுய தொழில்முனைவோராக மாறியுள்ளேன். மாதம் 2 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டமுடிவதோடு, பத்து பேருக்கு வேலைவாய்ப்பும் அளிக்கமுடிகிறது' என்றார்.
'தாட்கோ' மேலாளர் ரஞ்சித்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.