/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஆன்மா இறைவனை அடைய வழிபாடு அவசியம்'
/
'ஆன்மா இறைவனை அடைய வழிபாடு அவசியம்'
ADDED : மே 12, 2024 05:21 AM

பல்லடம்: பல்லடம், கணபதிபாளையம், மலையம்பாளையம் கிராமத்தில் உள்ள வடுகநாத சுவாமி கோவிலில், 15வது ஆண்டு விழா, நுாறாயிரம் பரவுதல், 108 வலம்புரி சங்காபிஷேகம் மற்றும் திருவிளக்கு வழிபாடு நடந்தன.
இதில், பங்கேற்ற பழநி ஆதீனம் சாது சண்முக அடிகளார் பேசியதாவது:
கோவில் வழிபாடு என்பதை எதற்காக செய்கிறோம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். 'வழி' என்றால் பாதை; 'பாடு' என்றால் உழைப்பு. இந்த ஆன்மா உடலை விட்டு பிரிந்ததும், இறைவனிடத்தில் சென்று சேர வேண்டும். இதற்கான வழியை உண்டாக்குவதுதான் கோவில் 'வழிபாடு' என்பதாகும். அப்படிப்பட்ட கோவில் வழிபாடுகளை செய்து இந்த ஆன்மா நல்ல நிலையை அடைய அனைவரும் உழைக்க வேண்டும். பல்வேறு காரணங்களால் எண்ணற்ற கோவில்கள் திருப்பணி மேற்கொள்ள முடியாமல் உள்ளன. அறநிலையத்துறை அதிகாரிகள் செய்வேன் என்று கூறினாலும் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. ஒரு நன்மை செய்யும்போது பல்வேறு இடையூறுகள் ஏற்படத்தான் செய்யும். கோவில் வழிபாடுகள் மூலம் இவற்றுக்கு தீர்வு கிடைக்கும்.
புராண இதிகாசங்களில், பசு, குரங்கு, சிலந்தி, பாம்பு, யானை என, எண்ணற்ற உயிரினங்கள் இறைவனை வழிபட்டு முக்தி பெற்றுள்ளன. எனவே, அவரவர் தெரிந்த மொழியிலேயே இறைவனை வழிபட வேண்டும். தமிழில் வழிபாடு செய்வதில் கொங்கு நாடுதான் உதாரணமாக உள்ளது. தமிழக அரசு ஆட்சி துவங்கியதில் இருந்து 400 கோவில்கள் திருப்பணிகள் நடந்துள்ளன. இன்னும், 500 கோவில்கள் பாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதை எப்படி வரும் இரண்டு ஆண்டுக்குள் நடத்தப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
அறநிலையத்துறை இல்லை எனில் வழக்குகள் தேங்கிவிடும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக திருவிளக்கு வழிபாடு, லட்சார்ச்சனை மற்றும் 108 சங்க அபிஷேகம் ஆகியவற்றை தொடர்ந்து, மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.