ADDED : மே 30, 2024 12:36 AM

திருப்பூர் : இன்று இல்லாவிட்டாலும், எதிர்காலத்தில் ரோட்டோர மரத்தை வெட்ட நேரிடலாம்! எப்படி மரத்துக்கு ஆபத்தில்லாமல் வளர்க்கலாம் என்று யோசித்த சிலர், ரோட்டின் மையத்தில் மரக்கன்று நட்டு வளர்க்கலாம் என்று யோசனை கூறி வருகின்றனர். மரம் உயரமாக வளர்ந்த பிறகு, போக்குவரத்துக்கு பாதிப்பு இருக்காது; மற்ற பணிகளால் மரத்துக்கும் பாதிப்பு வராது.
திருப்பூர் மாநகராட்சி புது ராமகிருஷ்ணாபுரம் பகுதியில், ரோட்டின் மையத்தில் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருவது, தற்போது அனைவரின் கவனத்துக்கும் வந்துள்ளது. பெரிய ரோடுகளில் இப்படி மரம் வளர்க்காவிட்டாலும், வார்டு ரோடுகள், ஊராட்சி மற்றும் பேரூராட்சி ரோடுகளில், இப்படி மையத்தடுப்புடன் ரோடு அமைத்து, அதில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கலாம்.
இயன்றவரை, பக்கவாட்டு கிளைகள் அதிகம் இல்லாமல் உயரமாக வளரும் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் பொறுப்பு, பசுமை அமைப்புகள் ஏற்கலாம். வளர்ச்சிப்பணி என்ற போதிலும், மின்கம்பம் பராமரிப்பு என்றாலும், கிளைகளை மட்டுமல்லாது மரங்களையே வெட்டி வீழ்த்தும் சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
இனிவரும் நாட்களில், போதிய இடவசதி இல்லாத பகுதிகளில், ரோட்டோரம் மரம் வளர்க்காமல் இப்படி மையத்தில் மரம் வளர்க்க வாய்ப்பு இருந்தால், மாவட்ட நிர்வாகமும், ஆராய்ந்து பார்த்து ஊக்குவிக்க வேண்டும் என்பது, பசுமை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.