உடுமலை நகராட்சியில் சேகரமாகும் பிளாஸ்டிக் மாதத்துக்கு 100 டன்! சுற்றுச்சூழல் பாதுகாப்பில் விழிப்புணர்வு தேவை
உடுமலை நகராட்சியில் சேகரமாகும் பிளாஸ்டிக் மாதத்துக்கு 100 டன்! சுற்றுச்சூழல் பாதுகாப்பில் விழிப்புணர்வு தேவை
UPDATED : ஆக 27, 2026 06:32 PM
ADDED : ஆக 27, 2026 06:21 PM

உடுமலை: உடுமலை நகராட்சியில், சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும், பிளாஸ்டிக் கழிவுகள், மாதம் தோறும் சராசரியாக, 100 டன் வரை சேகரிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து, மாற்றுப்பொருட்களை பயன்படுத்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
உடுமலை நகராட்சியில், 33 வார்டுகளில், 74,528 பேர் வசிக்கின்றனர். நகராட்சி பகுதிகளில், 17,526 வீடுகள், 1,038 வணிக நிறுவனங்கள் உள்ளன. நகராட்சியில், நாள் ஒன்றுக்கு, சராசரியாக, 21.36 டன் கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், உபயோகிப்பாளர்களுக்கு குப்பை வரி நிர்ணயிக்கப்பட்டு, சொத்து வரியுடன் சேர்த்து வசூலிக்கப்படுகிறது.
வீடுகள், தொழில் நிறுவனங்களில், 230க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் வாயிலாக, வீடுகள், வணிக நிறுவனங்களில் நேரடியாக குப்பை, கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து பெறப்பட்ட நிலையில், தற்போது, திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026ன் கீழ், நான்கு வகையாகப் பிரித்து, வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதில், ஈரக்கழிவு, மக்கும் கழிவு ஒரு வகையாகவும், உலர் கழிவு அல்லது மக்காத கழிவு, சுகாதாரக் கழிவு மற்றும் வீட்டு அபாயகர கழிவாக வகைப்படுத்தப்பட்ட சிறப்பு கவனிப்பு கழிவு என, நான்கு வகையாக பிரித்து, துாய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும்.
உடுமலை நகராட்சியில் சேகரிக்கப்படும் கழிவுகளில், மக்கும் குப்பை தனியாக பிரித்து, மூன்று நுண்உரக்குடில்களில் அரைத்து, உரமாக மாற்றப்படுகிறது.
இதில், மண்ணில் விழுந்தால் மக்காமல், சுற்றுச்சூழலுக்குஆபத்தை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவு சேகரமாகிறது. அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக், டம்ளர்கள் மற்றும் மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பால் கவர், பிளாஸ்டிக் பாட்டில்கள் என, தினமும் சராசரியாக, 4 டன் வரை பிளாஸ்டிக் கழிவுகள் சேகரமாகிறது.
இதில், மறு சுழற்சி பிளாஸ்டிக் பொருட்கள் தனியாக பிரிக்கப்படும் நிலையில், மறு சுழற்சிக்கு பயன்படாத மற்றும் ஆபத்தான பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவு வெளியேற்றப்படுகிறது. இவ்வாறு, உடுமலை நகராட்சியிலிருந்து மட்டும், மாதம் தோறும், 90 முதல், 100 டன் வரை, பிளாஸ்டிக் கழிவுகள் சேகரமாகிறது. இக்கழிவு, திருச்சியிலுள்ள தனியார் சிமென்ட் உற்பத்தி தொழிற்சாலைக்கு அனுப்பப்படுகிறது.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள, 72 ஊராட்சிகள் மற்றும் 5 பேரூராட்சிகளில், அதிகளவு பிளாஸ்டிக் கழிவுகள் வெளியேற்றப்படுகிறது.
நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் முறையாக செயல்படுத்தப்படுவதால், பிளாஸ்டிக் கழிவுகள் பிரித்து, எரிபொருளாக அனுப்பப்படுகிறது. ஆனால், ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில், ஆபத்தான பிளாஸ்டிக் கழிவுகள் முறையாக அழிக்காமல், பல நுாறு டன் கழிவுகள், பொது இடங்களில், நீர் நிலைகளிலும் கொட்டப்பட்டு, தீ வைக்கப்படுகிறது.
சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும், பிளாஸ்டிக் கழிவுகளுக்கு அரசு தடை விதித்துள்ள நிலையிலும், பயன்பாட்டை கட்டுப்படுத்த முடியாமல், அபரிமிதமாக உயர்ந்து வருவது ஆபத்துக்கு அறிகுறியாக உள்ளது.
அதனால், சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல், எளிதில் மக்கும், இயற்கை முறையில் உற்பத்தி செய்யும் பொருட்கள், மஞ்சள் பை பயன்படுத்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகும்.
உள்ளாட்சி அமைப்பு அலுவலர்கள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுக்கும் வகையில் உரிய ஆய்வுகள் மேற்கொண்டு, அவற்றை பறிமுதல் செய்து, கடும் நடவடிக்கை எடுப்பதுடன், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
