ADDED : மார் 25, 2026 08:39 PM

திருப்பூர்:''பத்தாம் வகுப்பு கணக்கு தேர்வு எளிதாக இருந்தது'' என, மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
பத்தாம் வகுப்பு பொது தேர்வில் நேற்று, கணக்கு பாடத்துக்கான தேர்வு நடந்தது. பொதுவாக, கணக்கு பாடம் என்றாலே பெரும்பாலான மாணவ, மாணவியர் மத்தியில் ஒருவித அச்சம் இருக்கும். ஆனால், நேற்று தேர்வெழுதிய மாணவர்கள் சிரித்த முகத்துடன் தேர்வு அறையில் இருந்து வெளியே வந்தனர்.
மாணவ, மாணவியர் கூறியதாவது:
நுாருல் சனா: கணித தேர்வு எளிதாக இருந்தது. ஒரு சில இரு மதிப்பெண் வினாக்கள் மட்டும், புத்தகத்தின் உட்புறமிருந்து, படைப்பாற்றலை பரிசோதிக்கும் வகையில் இருந்தது; மற்றபடி பிற வினாக்கள் அனைத்தும் எளிதாக தான் இருந்தன; அதிக மதிப்பெண் கிடைக்கும் என, எதிர்பார்க்கிறேன்.
நேஹாஸ்ரீ: கணக்கு தேர்வு பயமுறுத்தவில்லை. அனைத்து மதிப்பெண் வினாக்களும் எளிமையாக, திரும்ப, திரும்ப பயிற்சி செய்த வினாக்களாக தான் இருந்தது. முக்கிய வினாக்களாக ஆசிரியர்கள் சுட்டிக்காட்டிய வினாக்களும் கேட்கப்பட்டிருந்தன.
செல்வமணி: கணித தேர்வில் அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கும் விதமாக தான், தேர்வு இருந்தது. நல்ல முறையில் தேர்வெழுதியுள்ளளேன். பெரும்பாலும் திரும்ப, திரும்ப பயிற்சி செய்த வினாக்கள் தான் கேட்கப்பட்டிருந்தன.
தேர்ச்சி அதிகரிக்கும்!
கணித ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், 'கணித தேர்வு எளிதாக அமைந்திருந்தது. மிக சுமாராக படிக்கும் மாணவர்கள் கூட தேர்ச்சி பெற முடியும். சராசரியாக படிக்கும் மாணவன், நல்ல மதிப்பெண் பெற முடியும். மிக நன்றாக படிக்கும் மாணவ, மாணவியர், 90 மதிப்பெண் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும். மிக நன்றாக படிக்கும் மாணவ, மாணவியர், 90 மதிப்பெண் வரை கூட பெற முடியும். அந்தளவுக்கு தான் வினாத்தாள் இருந்தது. இம்முறை, கணக்கு பாடத்தில் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க வாய்ப்புண்டு,' என்றனர்.
