ADDED : பிப் 24, 2026 05:53 AM

திருப்பூர்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அறிவியல் செய்முறைத்தேர்வு நேற்று துவங்கியது; வரும், 27 வரை நடக்கிறது.
மார்ச் 11 முதல், ஏப். 6ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில், 14 ஆயிரத்து 375 மாணவர், 15 ஆயிரத்து 069 மாணவியர் என மொத்தம், 29 ஆயிரத்து, 444 பேர் தேர்வெழுத உள்ளனர். 108 தேர்வு மையங்களில் பொதுத்தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் துவங்கியுள்ளன. இந்நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவியருக்கான அறிவியல் செய்முறைத்தேர்வு நேற்று துவங்கியது.
காலை 10:00 முதல் மதியம், 2:00 மணி வரை உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள தேர்வு மையங்களில் மாணவ, மாணவியர் எண்ணிக் கைக்கு ஏற்ப, தேர்வறை ஒதுக்கப்பட்டு, தேர்வர்களுக்கு செய்முறை தேர்வுகள் நடத்தப்பட்டது.
அதிகளவில் மாணவ, மாணவியரை கொண்ட பள்ளிகளில், பல்வேறு சுற்றுகளாக தேர்வு நடத்தப்படுகிறது. வரும், 27ம் தேதிக்குள் அறிவியல் செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க தேர்வுத்துறை இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.
