/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பயிர்காப்பீடு செய்ய இன்னும் 2 நாட்கள்; வேளாண் துறை அழைப்பு
/
பயிர்காப்பீடு செய்ய இன்னும் 2 நாட்கள்; வேளாண் துறை அழைப்பு
பயிர்காப்பீடு செய்ய இன்னும் 2 நாட்கள்; வேளாண் துறை அழைப்பு
பயிர்காப்பீடு செய்ய இன்னும் 2 நாட்கள்; வேளாண் துறை அழைப்பு
ADDED : நவ 27, 2024 09:26 PM
உடுமலை; நெல், மக்காச்சோளம், பயிர்களுக்கு காப்பீடு செய்து கொள்ள, இரண்டு நாட்களே உள்ளதால், விவசாயிகள் உடனடியாக காப்பீடு செய்து கொள்ளுமாறு, வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
இயற்கை சீற்றங்களால் சாகுபடியிலுள்ள பயிர்கள் பாதித்து, விவசாயிகள் பாதிப்பதை தடுக்கும் வகையிலும், உரிய இழப்பீடு பெறும் வகையிலும், பயிர்காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மத்திய அரசு, தற்போது பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில், புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
பயிர்கடன் பெறும் விவசாயிகளை, கட்டாயமாக பதிவு செய்து வந்த நிலையில், தற்போது அவர்களின் விருப்பத்தின் பேரில் மட்டுமே, பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட வாரியாக, பயிர் வாரியான சராசரி மகசூல் அடிப்படையில், காப்பீட்டுத்தொகை நிர்ணயிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திற்கு, இத்திட்டத்தில் தற்போது, சிறப்பு பருவம் மற்றும் ராபி பருவத்தில், நெல், மக்காச்சோளம், கொண்டைக்கடலை மற்றும் சோளம் ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செய்து கொள்ள அனுமதியளிக்கப்பட்டது.
நெல்லுக்கு காப்பீடு செய்ய, கடந்த, 15ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், கூடுதல் அவகாசம் வழங்க மாநில அரசு வலியுறுத்தியதால், தற்போது, வரும், 30ம் தேதி வரை காப்பீடு செய்து கொள்ள, மத்திய அரசு கால நீடிப்பு வழங்கியுள்ளது.
எனவே, நெல் சாகுபடி விவசாயிகள், ஏக்கருக்கு ரூ.573 பிரீமியம் செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம். அதே போல், மக்காச்சோளத்திற்கு, - ஏக்கருக்கு ரூ.541 -பிரீமியமாகவும், கொண்டைக்கடலை ஏக்கருக்கு ரூ.231 பிரீமியமாகவும், வரும், 30ம் தேதிக்குள் செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.
சோளம் பயிருக்குஏக்கருக்கு ரூ.50 பிரீமியம், வரும் டிச., 16க்குள் காப்பீடு செய்ய காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் வாயிலாக, பயிர்க்காப்பீடு செய்துகொள்ளலாம்.
கடன் பெறாத விவசாயிகள், நடப்பு பசலி ஆண்டுக்கான அடங்கலை கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்று, அதனுடன் வங்கிக்கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் காப்பீடு செய்யலாம்.
எனவே, விவசாயிகள் இயற்கை சீற்றங்களால், பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் பொருளாதார இழப்புகளிலிருந்து தப்பிக்க, உடனடியாக காப்பீடு செய்து கொள்ளுமாறு, உடுமலை வேளாண் உதவி இயக்குனர் தேவி தெரிவித்துள்ளார்.