ADDED : ஜூன் 08, 2026 03:56 AM

திருப்பூர்: திருப்பூர் கலெக்டர் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்தில், 24 மணி நேரமும் பட்டொளி வீசிப் பறக்கும் வகையில் 100 அடி உயர கொடிக்கம்பத்தில் பிரம்மாண்ட தேசியக்கொடி நேற்று ஏற்றி வைக்கப்பட்டது.
'வெற்றி' அறக்கட்டளை, கிளாசிக் போலோ குழுமம், அனிதா டெக்ஸ் காட் இந்தியா நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் 12 லட்சம் ரூபாய் மதிப்பில் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை அமைச்சர்கள் செங்கோட்டையன், அருண்ராஜ், கமலி முன்னிலையில் கலெக்டர் மனிஷ் நாரணவரே 24 அடி நீளம், 14 அடி அகலமுள்ள தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். போலீஸ் வாத்திய இசையுடன் தேசிய கீதமும் பாடப்பட்டது.
முழுக்க முழுக்க மின் மோட்டார் மற்றும் இரும்பு கம்பியைக் கொண்டு தானியங்கி முறையில் இயங்கும் வகையில் இந்த கொடிக்கம்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பராமரிப்புப் பணிகளை 'வெற்றி' அறக்கட்டளை மேற்கொள்ளும்; இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கொடி புதுப்பிக்கப்படும் என்று வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.
வெற்றி அறக்கட்டளைத்தலைவர் சிவராம், அனிதாடெக்ஸ் காட் இந்தியா நிர்வாக இயக்குனர் சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
