/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
24 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்
/
24 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்
24 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்
24 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்
ADDED : ஏப் 16, 2025 11:11 PM

திருப்பூர்; அவிநாசியில் 24 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், முக்கியப்புள்ளி உள்பட 3 பேரை உவுணப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
ரேஷன் அரிசி கேரளா போன்ற வெளிமாநிலங்களுக்கு கடத்துவது தொடர்பாக திருப்பூர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்காணித்து கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அரிசி கடத்தல் கும்பல் பரவலாக ஒவ்வொரு இடங்களிலும் தங்களுக்கான நபர்களை பணிக்கு அமர்த்தி, ஆங்காங்கே அரிசி தேவைப்படாதவர்கள் மற்றும் பணத் தேவை உள்ள மக்களிடம் அரிசியை வாங்கி, அதற்கான சொற்ப தொகையை மட்டும் கொடுக்கின்றனர். இவர்களிடம் இருந்து வாங்கும் அரிசியை டூவீலரில் ஆரம்பித்து சரக்கு வாகனங்களில் வேறு பொருட்களோடு, பொருட்களாக மறைத்து வைத்து கடத்துகின்றனர். அரிசி கும்பல் வடமாநிலத்தினர் தங்கியுள்ள பகுதியில் கூடுதல் விலைக்கு விற்கின்றனர். இல்லையென்றால் கேரளா போன்ற மாநிலங்களுக்கு கடத்துகின்றனர்.
சில மாதங்களாக அவிநாசியில் இயங்காமல் உள்ள சில மில்களில் அரிசி கடத்தல் கும்பல் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து கடத்துவது குறித்து போலீசாருக்கு தெரியவந்தது. மூன்று நாள் முன்பு, ஆட்டையம்பாளையத்தில் உள்ள மில் ஒன்றில் ரேஷன் அரிசியை கடத்தி வந்து, பதுக்கி வைத்திருப்பது தெரிந்தது. கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்த ரைஸ் மில் உரிமையாளர் தண்டபாணி, 72, மேலாளர் விஜயகரன், 25 ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 24 டன் ரேஷன் அரிசி, வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் அரிசி கடத்தல் கும்பல் மக்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி, அவிநாசியில் பதுக்கியது தெரியவந்தது. வழக்கில் தொடர்புடைய முக்கிய புள்ளி அவிநாசியை சேர்ந்த சத்தியகாந்தி, 40, கோவையை சேர்ந்த டிரைவர்கள் கருப்புதுரை, 27, மணிகண்டன், 26 என, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். லாரியை பறிமுதல் செய்தனர். அரிசி கடத்தல் மன்னனாக உள்ள சத்தியகாந்தி தொடர்ந்து இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டு வருபவர். அவரை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு பின்னணியில், அரிசி கடத்தல் தொடர்பான பல்வேறு தகவல்களை போலீசார் திரட்டியுள்ளனர். வலைப்பின்னல் போல் நீளும் இந்த வழக்கில், மேலும் சிலர் சிக்குவர் என்று தெரிகிறது.