/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
27ல் மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்
/
27ல் மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்
ADDED : பிப் 23, 2024 12:57 AM
திருப்பூர்;வரும் நிதியாண்டுக்கான திருப்பூர் மாநகராட்சி பட்ஜெட் வரும் 27-ல் தாக்கலாகிறது.
வரும் 2024 -25ம் ஆண்டுக்கான திருப்பூர் மாநகராட்சி பட்ஜெட் வரும் 27ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. தற்போது பதவியில் உள்ள உள்ளாட்சி அமைப்பு பதவியேற்ற பின் தாக்கல் செய்யப்படும் 3வது பட்ஜெட்டாக இது உள்ளது. மேயர் உள்ளிட்ட கவுன்சிலர் குழு பதவியேற்ற பின், முதன்முறையாக 2022-23 ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இது 1,558 கோடி ரூபாய்க்கான பட்ஜெட். இது, 10 கோடி ரூபாய் பற்றாக்குறை பட்ஜெட்டாக அமைந்தது.
கடந்த 2023-24ம் நிதியாண்டுக்கானது, 1,439 கோடி ரூபாய்க்கான பட்ஜெட்டாகவும், 1.59 கோடி ரூபாய் பற்றாக்குறை பட்ஜெட்டாகவும் இருந்தது.
நடப்பு நிதியாண்டில் மாநகராட்சிக்கான வருவாய் இனங்கள் பெருமளவு அதிகரித்துள்ளன. 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம் உள்ளிட்டவற்றில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் வாயிலாக வருவாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், புதிய குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், இதன் வாயிலான வருவாய்; அதிகரித்து வரும் கட்டடங்கள் வாயிலான சொத்து வரி விதிப்பு போன்ற பல்வேறு அம்சங்கள் மாநகராட்சியின் வருவாய் அதிகரிக்க காரணமாக உள்ளன.
மேலும், புதிய குடியிருப்பு பகுதிகள் அதிகரிப்பு மூலம் வருவாய் அதிகரிக்கும். நிர்வாகத்தின் தீவிர முயற்சி மற்றும் ஆய்வுகள் காரணமாக வரி விதிப்புகளில் இருந்த பல்வேறு முரண்பாடுகள் களையப்பட்டு, திருத்தங்கள் செய்வதன் மூலம் வருவாய் அதிகரிக்க வாய்ப்பு காணப்படுகிறது.
மேயர் உள்ளிட்ட கவுன்சிலர்களுக்கான மாத சம்பளம்; மின் கட்டண உயர்வு; கட்டடங்கள், ரோடுகள் போன்றவற்றின் பராமரிப்பு செலவு விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால் கூடுதல் செலவை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இந்நிலையில் வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட் உபரி பட்ஜெட்டாக இருக்குமா, வழக்கம் போல் பற்றாக்குறை பட்ஜெட்டாக இருக்குமா என்ற விவாதம் ஒரு புறம் எழுந்துள்ளது.
இருப்பினும் பல்வேறு தரப்பினர் மத்தியிலும், இந்த பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.