/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
2,900 விதிமீறல்களில் நடவடிக்கை பூஜ்ஜியம்
/
2,900 விதிமீறல்களில் நடவடிக்கை பூஜ்ஜியம்
ADDED : மே 31, 2024 03:13 AM
திருப்பூர: ''பி.ஏ.பி., பாசனப்பகுதியில் ஏற்கனவே, 2,900 விதிமீறல்கள் பாசன பகுதிகளில் உள்ளதாக, நீர்வளத்துறையினர் கூறியுள்ள நிலையில், அத்தகைய விதிமீறலில் ஈடுபட்டவர்கள் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை'' என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பி.ஏ.பி., வெள்ளகோவில் கிளை கால்வாய், காங்கேயம்-வெள்ளகோவில் நீர் பாதுகாப்பு சங்க தலைவர் வேலுசாமி
அறிக்கை:
முறைகேடான நீர்பாசனத்தால் சீரழிந்த நிலைக்கு பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம்(பி.ஏ.பி.,) தள்ளப்பட்டுள்ளது. தற்போது, செயல்படாத பாசன சபையால், மேலும் நிலைமை மோசமடைந்திருக்கிறது. நீர்பாசன மேலாண்மை குறித்து, பாசன அமைப்புக்கு எவ்வித பயிற்சியும் இதுகுறித்து வழங்கப்படவில்லை; இதுகுறித்து யாரும் கேள்வியும் எழுப்பவில்லை. அனைத்து ஆயக்கட்டுதாரர்களுக்கும் சமமான நீர் வினியோகம் செய்யப்பட வேண்டும் என்ற விதி கடைபிடிக்கப்படுவதில்லை.
குப்பைத் தொட்டியாக கால்வாய்
பரம்பிக்குளம் பிரதான கால்வாயின் நீர் போக்கு திறன், 1,030 'கியுசக்ஸ்', (ஒரு நொடிக்கு கன சென்டி மீட்டர்) என்ற நிலையில், 890 'கியுசக்ஸ்' அளவு தண்ணீர் மட்டுமே வெளியேறுகிறது. பரம்பிக்குளம் பிரதான கால்வாயின் பல இடங்களில் குப்பை, கோழிக்கழிவுகள் கொட்டப்படுவது, விவசாயிகளுக்கு பெரும் தொல்லையாக மாறியிருக்கிறது.
நீரோட்டத்தை அளவிட, 25 ஆண்டு பழமையான 'காலிப்ரேஷன் சார்ட்' பயன்படுத்துவது அபத்தமானது. கால்வாயில், கடந்த மூன்றாண்டாக எந்தவொரு குடிமராமத்து பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. பல இடங்களில் பிரதான மற்றும் உப கால்வாய்கள் உடைந்து, சிதிலமடைந்துள்ளன. நீர் வினியோகத்தில், பி.ஏ.பி., நிர்வாகம் ஐகோர்ட் உத்தரவை பின்பற்றாமல் உள்ளது.
சம்பிரதாயமாக பாசன சபை
நீர் திருட்டு குறித்து, கோவை, திருப்பூர் மாவட்ட அதிகாரிகள் மேற்கொண்ட கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்த தகவல் இல்லை. ஏற்கனவே, 2,900 விதிமீறல்கள் பாசன பகுதிகளில் உள்ளதாக, நீர்வளத்துறையினர் கூறியுள்ள நிலையில், அத்தகைய விதிமீறலில் ஈடுபட்டவர்கள் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பி.ஏ.பி., பாசன அணைகளில், 150 கோடி ரூபாய்க்கும் மேலான செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப்பணிகளின் நிலை குறித்து, பாசன சபை ஆய்வு மேற்கொள்வதாக தெரியவில்லை. ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் குறித்து பாசன சபை கண்டுகொண்டதாக தெரியவில்லை. பாசன சபை என்பது சடங்கு, சம்பிரதாயமாகவே உள்ளது. பாசன சபையைக் கலைப்பதே சிறந்தது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.