/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
2வது திட்ட குழாய் சேதம்; சீரமைப்பு பணி ' ஆமை' வேகம்
/
2வது திட்ட குழாய் சேதம்; சீரமைப்பு பணி ' ஆமை' வேகம்
2வது திட்ட குழாய் சேதம்; சீரமைப்பு பணி ' ஆமை' வேகம்
2வது திட்ட குழாய் சேதம்; சீரமைப்பு பணி ' ஆமை' வேகம்
ADDED : அக் 09, 2024 12:27 AM

திருப்பூர் : நான்காவது திட்ட குடிநீர் குழாய் பதிக்கும் போது, 2வது குடிநீர் திட்டக் குழாய் சேதமானது. சீரமைப்பு பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால், பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.
திருப்பூர் மாநகராட்சி, 55வது வார்டுக்கு உட்பட்டது பெரிச்சிபாளையம். இப்பகுதியில், தாராபுரம் ரோட்டிலிருந்து 2வது திட்ட குடிநீர் குழாய், அரசு உயர்நிலைப் பள்ளி ரோடு வழியாக, பெரிச்சிபாளையம் மேல்நிலைத் தொட்டிக்கு செல்கிறது.
தற்போது, இப்பகுதியிலிருந்து, 49வது வார்டுக்கு நான்காவது குடிநீர் திட்டத்தில் குடிநீர் கொண்டு செல்ல குழாய் பதிப்பு பணிக்காக, உயர்நிலைப் பள்ளி செல்லும் ரோட்டில் குழி தோண்டப்பட்டது. இப்பணியின் போது, அந்த இடத்தில் பதிக்கப்பட்டிருந்த, 2வது குடிநீர் திட்ட பிரதான குழாய் சேதமடைந்தது.
சிமென்ட் குழாய்கள் என்பதால், உடனடியாக சரி செய்யப்படவில்லை. மேலும், பிரதான குழாய் என்பதால் வேறு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகத்தை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த உடைப்பு சரி செய்ய தாமதமாகும் என்ற நிலையில், புதிய குழாய் பதிக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, ரோட்டின் மையத்தில் தோண்டப்பட்ட குழி மூடப்படாமல் உள்ளது. இவ்வழியாகச் சென்று வரும் வாகனங்கள், மாற்று வழியில் செல்கின்றன. குழாய் உடைந்த இடத்தில் ஆபத்தான நிலையில் பாதசாரிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் நடந்து செல்கின்றனர்.
அப்பகுதியினர் கூறுகையில், 'இந்த ரோடு சமீபத்தில் தான் புதுப்பிக்கப்பட்டது. அதன்பின் கடந்த வாரம் குழாய் பதிக்க தோண்டியதில், ஏற்கனவே இருந்த குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. குழி மூடப்படாமல் நடந்து செல்லவும் முடியவில்லை. குடிநீர் சப்ளையும் நிறுத்தப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் மிகவும் மந்தமாக நடக்கிறது. இரண்டு நாளில் ஆயுத பூஜை, அடுத்து தீபாவளி என்பதால், விரைவாக பணிகளை முடிக்க வேண்டும்,' என்றனர்.