/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
3 நாளில் குவிந்த 30,468 விண்ணப்பம்
/
3 நாளில் குவிந்த 30,468 விண்ணப்பம்
ADDED : நவ 25, 2024 06:16 AM
திருப்பூர்; வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் - 2025, கடந்த அக். 29ல் துவங்கி நடைபெற்று வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவிநாசி, உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், காங்கயம் ஆகிய எட்டு சட்டசபை தொகுதிகளிலும், வாக்காளர்களிடமிருந்தும், பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தங்களுக்கான படிவங்கள், நேரடியாகவும், ஆன்லைனிலும் பெறப்பட்டு வருகின்றன.
சுருக்கமுறை திருத்த காலத்தில், நான்கு சிறப்பு முகாம் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதன்படி, அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், கடந்த 16, 17ம் தேதிகளில் முதல் கட்டமாகவும், நேற்றுமுன்தினம் மற்றும் நேற்று இரண்டாம் கட்டமாகவும் என, நான்கு நாட்கள் சிறப்பு முகாம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகளில் உள்ள 2,536 ஓட்டுச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு, வாக்காளர்களிடமிருந்து, பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தத்துக்கான படிவங்கள் பெறப்பட்டுள்ளன.
நேற்றுமுன்தினம் வரையிலான மூன்று முகாம்களில் மட்டும், வாக்காளர்களிடமிருந்து மொத்தம், 30 ஆயிரத்து 468 படிவங்கள் பெறப்பட்டுள்ளன. பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக 15,507 படிவம் - 6 பெறப்பட்டுள்ளன; பெயர் நீக்கத்துக்காக 4,596 படிவம் - 7 விண்ணப்பங்கள்; முகவரி மாற்றம், புகைப்படம் உள்பட அனைத்துவகை திருத்தங்களுக்காக, 10,728 படிவம் - 8 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
கடந்த அக். 29ம் தேதி முதல் நேற்றுமுன்தினம் வரை, பெயர் சேர்ப்பதற்காக, 19,499 படிவங்கள்; பெயர் நீக்கத்துக்காக, 6,798 படிவங்கள்; திருத்தத்துக்காக, 15,661 படிவங்கள்; வெளிநாடு வாழ் இந்தியர் பெயர் சேர்ப்பதற்காக ஒன்று என, மொத்தம் 41 ஆயிரத்து 959 படிவங்கள் பெறப்பட்டுள்ளன.
கடைசி நாளில் ஆர்வம்
கடைசி முகாம் நாளான நேற்றும், அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தத்துக்கான படிவங்களை பூர்த்தி செய்துகொடுக்க வாக்காளர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். வரும் 28ம் தேதியுடன் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் முடிவடைகிறது.