"கொள்ளை'யடிக்கும் "மோட்டல்'கள் தொலைதூர பஸ் பயணிகள் கண்ணீர்
"கொள்ளை'யடிக்கும் "மோட்டல்'கள் தொலைதூர பஸ் பயணிகள் கண்ணீர்
ADDED : பிப் 01, 2012 01:14 AM
திருப்பூர் : தொலைதூர பஸ்களில் பயணிக்கும் மக்கள் சாப்பிடும் 'மோட்டல்'களில், உணவு பதார்த்தங்களுக்கு அதிக விலை வசூலிக்கப்படுகிறது.
உணவுகளும் தரமில்லாமல் இருப்பதால், பயணிகள் புலம்புகின்றனர். பஸ்சுக்கு 40 ரூபாய் வீதம், போக்குவரத்து கழகம் கட்டணம் வசூலித்துக் கொள்வதால், பயணிகளின் குறைகளை கண்டுகொள்வதில்லை.
மதுரை, திண்டுக்கல், திருச்சி, சேலம், தர்மபுரி, கும்பகோணம், கன்னியாகுமரி என தொலைதூர ஊர்களுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பஸ்களில் பயணிக்கின்றனர். நான்கு மணி நேரம் முதல் எட்டு மணி நேரம் வரை, பயணிப்பதால் இடையே வழித்தடங்களில் பசியாறிக்கொள்ள, 'மோட்டல்'களில் (உணவுக்கூடங்கள்) பஸ்கள் நிறுத்தப்படுகின்றன.
டிரைவர், கண்டக்டருக்கு இலவச டிபன், சாப்பாடு மற்றும் தண்ணீர் பாட்டில், சிகரெட் பாக்கெட் டுகளை, சில மோட்டல்களில் வழங்குவதாகவும், அதனால் தரமில்லாத, அதிக விலை கொண்ட 'மோட்டல்'களில், டிரைவர்கள் பஸ்களை நிறுத்துவதாகவும் பயணிகள் மத்தியில் புகார் உள்ளது.
தற்போது, மாநிலம் முழுவதும் மோட்டல்களில் கட்டணம் வசூலிக்கும் முறையை, தமிழக அரசு பஸ் போக்குவரத்து துறை எடுத்துள்ளது. இதன்படி, குறிப்பிட்ட வழித்தடங்களில் செல்லும் தொலைதூர பஸ்கள், குறிப்பிட்ட மோட்டல்களில் பஸ்சை நிறுத்தவும், ஒரு பஸ்சுக்கு 40 முதல் 50 ரூபாய் வீதம், மாதந்தோறும் நிறுத்தப்படும் மொத்த பஸ்களின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு, குறிப்பிட்ட தொகையை மோட்டல் நிர்வாகம், சம்பந்தப்பட்ட கோட்டத்தில் போக்குவரத்து கழகத்துக்கு செலுத்த வேண்டும்.
அரசு பஸ் போக்குவரத்து கழக அதிகாரியிடம் கேட்ட போது, 'மோட்டல்களில் கட்டணம் வசூலிக்கும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது; திருப்பூரில் இதுவரை 40 பஸ்கள் வரை மட்டுமே குறிப்பிட மோட்டல்களில் நிறுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. விலை அதிகம், தரமில்லை என்ற புகார்களை அடுத்தே, மோட்டல் நிர்வாகம், அரசுக்கு கட்டணம் செலுத்தும் நடைமுறை வந்துள்ளது. இப்பிரச்னை தொடரும் பட்சத்தில், மோட்டல்களில் சுகாதாரமான உணவு தரவும், நியாயமான விலையில் விற்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.
