ADDED : ஏப் 16, 2026 05:46 PM

திருப்பூர்:தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ல் நடக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டசபை தொகுதிகளிலும் தேர்தல் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார்படுத்தும் மற்றும் வேட்பாளர் விவரங்கள் அடங்கிய 'வாக்குச்சீட்டு' (பேலட் ஷீட்) பொருத்தும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, நாம் தமிழர், த.வெ.க. மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 116 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் மோதுகின்றனர். இவர்களுக்கான வாக்குப்பதிவு, மாவட்டம் முழுவதும் உள்ள 1,112 மையங்களில் அமைக்கப்பட்டுள்ள 2,822 வாக்குச்சாவடிகளில் நடைபெற உள்ளது.
பாதுகாப்பு அறையில்
இயந்திரங்கள் இருப்பு
வாக்குப்பதிவு தடையின்றி நடப்பதை உறுதி செய்ய, கூடுதல் இருப்பு இயந்திரங்களுடன் தொகுதி வாரியாகப் பிரித்து அனுப்பப்பட்டுள்ளன. அந்தந்த தொகுதிகளுக்கான 'பாதுகாப்பு அறை'யில்(ஸ்ட்ராங் ரூம்) இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
தாராபுரம்: 384 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 416 விவிபேட்.
காங்கயம்: 381 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 413 விவிபேட்.
அவிநாசி: 446 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 483 விவிபேட்.
திருப்பூர் வடக்கு: 530 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 574 விவிபேட்.
பல்லடம்: 576 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 624 விவிபேட்.
உடுமலை: 368 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 399 விவிபேட்.
மடத்துக்குளம்: 352 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 382 விவிபேட்.
திருப்பூர் தெற்கில்
சிறப்பு ஏற்பாடு
திருப்பூர் தெற்கு தொகுதியில் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், அங்கு மட்டும் கூடுதலாக 346 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், இருமடங்கு அதிகமாக 692 வாக்குப்பதிவு இயந்திரங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தின் ஒட்டுமொத்த கணக்குப்படி 3,383 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 3,729 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 3,666 விவிபேட் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.
வாக்கு இயந்திரம்
சரிபார்ப்பு பணி
வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், நேற்று முதல் இயந்திரங்களைச் சரிபார்க்கும் பணி தொடங்கியது. திருப்பூர் வடக்கிற்கு நஞ்சப்பா பள்ளியிலும், தெற்கு தொகுதிக்கு குமரன் மகளிர் கல்லுாரியிலும் இப்பணிகள் நடக்கின்றன.
'பெல்' நிறுவனத்தைச் சேர்ந்த 16 வல்லுனர்கள் (தொகுதிக்கு இருவர்) மற்றும் மண்டல அலுவலர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இயந்திரங்களில் புதிய மின்கலன்கள் பொருத்தப்படுகின்றன. வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் புகைப்படம், பெயர் மற்றும் சின்னம் பொறிக்கப்பட்ட வாக்குச்சீட்டுகள் முறைப்படி பொருத்தப்படுகின்றன.
வாக்காளர் தனது வாக்கினை உறுதி செய்யும் விவிபேட் இயந்திரங்களில் வேட்பாளரின் சின்னம் மற்றும் காகிதச் சுருள்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.
வரும் 22-ம் தேதி இந்த இயந்திரங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்குக் கொண்டு செல்லப்படும். 23-ம் தேதி காலை ஜனநாயகக் கடமையை ஆற்ற மக்கள் தயாராகும் வேளையில், அனைத்து இயந்திரங்களும் செயல்படத் தொடங்கும் எனத் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
---
திருப்பூர் வடக்கு தொகுதிக்கான விவிபேட் இயந்திரங்களில், பேப்பர் பொருத்தும் பணி நடந்தது.
திருப்பூர் தெற்கு தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில், வாக்குச்சீட்டு பொருத்தப்பட்டுள்ளது.
