/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
4 ஆயிரம் வழக்குகள் விசாரணை : ரூ.42 கோடி மதிப்பில் தீர்வுகள்
/
4 ஆயிரம் வழக்குகள் விசாரணை : ரூ.42 கோடி மதிப்பில் தீர்வுகள்
4 ஆயிரம் வழக்குகள் விசாரணை : ரூ.42 கோடி மதிப்பில் தீர்வுகள்
4 ஆயிரம் வழக்குகள் விசாரணை : ரூ.42 கோடி மதிப்பில் தீர்வுகள்
ADDED : டிச 14, 2025 07:51 AM

திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று நடந்த லோக் அதாலத் என்னும் மக்கள் நீதிமன்ற நிகழ்வில், 4ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரிக்கப்பட்டு, மொத்தம் 42 கோடி ரூபாய் மதிப்பில் தீர்வு ஏற்படுத்தப்பட்டது.
மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில், திருப்பூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் நேற்று திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் மற்றும் தாலுகா கோர்ட்களில் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பிலும் இந்த லோக் அதாலத் நிகழ்வு நடைபெற்றது. இதில், குடும்பநல வழக்குகள், சிவில் வழக்குகள், விபத்துஇழப்பீடு வழக்குகள், சேவை தொடர்பான வழக்குகள், நில எடுப்பு இழப்பீடு வழக்குகள் மற்றும் சமரசம் செய்யக் கூடிய சிறு குற்ற வழக்குகள் ஆகியன விசாரிக்கப்பட்டது. இதை முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி பத்மா துவக்கி வைத்தார். நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் செல்லதுரை, நீதிபதிகள் ஸ்ரீதர், சுந்தரம், பிரபாகர், மோகனவள்ளி, ஸ்ரீ வித்யா, கண்ணன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சந்தோஷ், மாஜிஸ்திரேட்கள் செந்தில்ராஜா, நாடியா பாத்திமா, தனலட்சுமி, லோகநாதன் முன்னிலை வகித்தனர்.
முதன்மை மாவட்ட நீதிபதி குணசேகரன் முன்னிலையில் எட்டு அமர்வுகளில் வழக்கு விசாரணை நடந்தது. இதில், 1,817 வழக்குகள் விசாரிக்கப்பட்டு, 21 கோடி ரூபாய் மதிப்பில் தீர்வு ஏற்படுத்தப்பட்டது. அவிநாசியில், மூன்று 3 அமர்வுகளில், 950 வழக்கில், 5.75 கோடி ரூபாய் மதிப்பிலும், தாராபுரத்தில் இரு அமர்வில், 227 வழக்குகள் 66 லட்சம் ரூபாய், காங்கயத்தில் மூன்று அமர்வில், 310 வழக்குகளில், 2.42 கோடி ரூபாய், மடத்துக்குளத்தில் 59 வழக்குகளில் 1.22 லட்சம் ரூபாய், பல்லடத்தில் மூன்று அமர்வில், 626 வழக்குகள், 10.50 கோடி ரூபாய், உடுமலையில், இரு அமர்வில், 337 வழக்கில், 1.5 கோடி ரூபாய், ஊத்துக்குளியில் 81 வழக்குகள் 7.10 லட்சம் ரூபாய் மதிப்பிலும் தீர்வு ஏற்படுத்தப்பட்டது. அவ்வகையில் மாவட்டம் முழுவதும் மொத்தம் 23 அமர்வுகளில், 4,407 வழக்குகள் விசாரிக்கப்பட்டு, மொத்தம், 42 கோடி ரூபாய் மதிப்பில் சமரசம் ஏற்பட்டது.
விபத்து இழப்பீடு ரூ. 90 லட்சம்
அவிநாசி பகுதியைச் சேர்ந்தவர் அருண், 32. பனியன் நிறுவன உரிமையாளர். கடந்த 2023ம் ஆண்டில் திருமுருகன் பூண்டி போலீஸ் நிலைய எல்லையில், பைக்கில் சென்ற போது, பஸ் மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். இதில் அவர் குடும்பத்தினர் இழப்பீடு கேட்டு வழக்கு தொடுத்தனர். இதில், லோக் அதாலத் நிகழ்வில் 90 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க இன்சூரன்ஸ் நிறுவனம் முன் வந்து அதற்கான ஒப்புதல் கடிதத்தை வழங்கியது.
--
திருப்பூரில் நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில், விபத்து இழப்பீட்டு தொகையாக 90 லட்சம் ரூபாய்க்கான காசோலையை பயனாளிக்கு மாவட்ட முதன்மை கூடுதல் நீதிபதி பத்மா வழங்கினார். அருகில், (இடமிருந்து) சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் சந்தோஷ், நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் செல்லத்துரை, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மோகனவள்ளி.

