/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாயமான குழாய் இணைப்பு கண்டுபிடிக்க 4 ஆண்டுகள்
/
மாயமான குழாய் இணைப்பு கண்டுபிடிக்க 4 ஆண்டுகள்
ADDED : பிப் 19, 2024 12:14 AM
திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 30வது வார்டு, பி.என்., ரோடு, மில்லர் பஸ் ஸ்டாப் பகுதியைச் சேர்ந்தவர் தீபக் குமார் சாவ்லா. அவருக்குச் சொந்தமான கட்டடத்தில், மாநகராட்சி சார்பில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டிருந்தது.
கடந்த 2019ல், அப்பகுதியில் ரோடு பணி மேற்கொண்ட போது, அவரது குடிநீர் குழாய் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு விட்டன. குடிநீர் வராத நிலையில் அவர் வேறு வழியின்றி தனியார் வாகனம் மூலம் குடிநீர் வாங்கிப் பயன்படுத்தி வந்துள்ளார். குடிநீர் வரவில்லை என்ற காரணத்தால் குடிநீர் கட்டணமும் செலுத்தவில்லை.
தற்போது மாநகராட்சி சார்பில், வரி வசூல் பணிகள் மும்முரமாக உள்ள நிலையில், அவரது குடிநீர் கட்டண நிலுவையை ெசலுத்துமாறு கோரி, மாநகராட்சி ஊழியர்கள் நோட்டீஸ் அளித்தனர். ஆனால், காணாமல் போன குழாய் இணைப்பை வழங்குவது குறித்து எந்த நடவடிக்கையும் இல்லை. தொடர்ந்து நிலுவைக்கட்டணத்தை செலுத்த வலியுறுத்தியதால் அவர் அதையும் செலுத்தினார்.
பின்னர், குழாய் இணைப்பை மீண்டும் வழங்க கோரி இதற்காக அவர் அளித்த கடிதத்தை கூட மாநகராட்சி அலுவலர்கள் பெற மறுத்தனர்.
இதுகுறித்து சமூக வலை தளங்களில், விமர்சனம் எழுந்தது. அதன் பின்னர் இரு நாட்கள் அங்கு குடிநீர் பிரிவு ஊழியர்கள் குழி தோண்டி குழாய் இணைப்பைக் கண்டுபிடித்து, சேதமான குழாய்களை மாற்றி அமைத்தனர்.

