/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
45 நாள் 'பேமென்ட்' அறிவிப்பு: வளர்ச்சிக்கான முன்னோட்டம் 'லகு உத்யோக் பாரதி' அமைப்பினர் வரவேற்பு
/
45 நாள் 'பேமென்ட்' அறிவிப்பு: வளர்ச்சிக்கான முன்னோட்டம் 'லகு உத்யோக் பாரதி' அமைப்பினர் வரவேற்பு
45 நாள் 'பேமென்ட்' அறிவிப்பு: வளர்ச்சிக்கான முன்னோட்டம் 'லகு உத்யோக் பாரதி' அமைப்பினர் வரவேற்பு
45 நாள் 'பேமென்ட்' அறிவிப்பு: வளர்ச்சிக்கான முன்னோட்டம் 'லகு உத்யோக் பாரதி' அமைப்பினர் வரவேற்பு
ADDED : பிப் 14, 2024 01:38 AM
திருப்பூர், பிப். 14-
''குறு, சிறு நிறுவனங்களின் வளர்ச்சிக்கான முன்னோட்டமாக, 45 நாட்களுக்குள் கட்டணம் செலுத்தும் அறிவிப்பு வெளியாகியுள்ளது,'' என, லகு உத்யோக் பாரதி வரவேற்பு தெரிவித்துள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. ஆண்டுக்கு ஐந்து கோடி ரூபாய் வரை பரிவர்த்தனை செய்தால் குறு நிறுவனம்; ஐந்து முதல், 50 கோடி ரூபாய் வரை செய்தால், சிறு நிறுவனம்; 50 கோடி முதல், 250 கோடி ரூபாய் வரை செய்தால், நடுத்தர நிறுவனம் என்று அரசு வகைப்படுத்தி உள்ளது.
நாட்டில் உள்ள, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில், 90 சதவீதமாக இருப்பது குறு நிறுவனங்கள். சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், 10 சதவீதம் மட்டுமே உள்ளன. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், மற்ற நிறுவனங்களுக்கான, 'ஜாப் ஒர்க்' செய்கின்றன.
பெரிய நிறுவனங்களுக்கான சேவைகளை அளித்து வந்தாலும், அதற்கான கட்டணம் உரிய காலத்தில் கிடைப்பதில்லை. உற்பத்தி மற்றும் சேவை கட்டணம் கிடைக்காதது, தேசிய அளவிலான பிரச்னையாக இருந்தது.
பிரச்னைக்கு தீர்வு
மத்திய அரசின், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வளர்ச்சி வாரியத்தின் உறுப்பினராக இருந்த, லகு உத்யோக் பாரதி பிரதிநிதிகள், கட்டணம் சட்டரீதியாக கிடைக்க வழிவகை செய்ய வேண்டுமென வலியுறுத்தி வந்தனர். அதன்படியே, 45 நாட்களுக்குள் கட்டணம் பட்டுவாடா செய்யப்பட வேண்டும் என்ற சட்டம், கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.
வரும் ஏப்., முதல், புதிய மாற்றங்களுடன் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, 45 நாட்களுக்குள் கட்டணம் பட்டுவாடா செய்யாத இனங்கள், நிதியாண்டு இறுதியில் செலவாக கணக்கிட முடியாது. மாறாக, வருவாயாக கருதி, அதற்கு வருமான வரி விதிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அறிவிப்பு, ஒட்டுமொத்த குறு, சிறு நிறுவனங்களின் நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு வழங்குவதாக உள்ளது.
இதுகுறித்து குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வளர்ச்சி வாரிய முன்னாள் உறுப்பினர் மோகனசுந்தரம் கூறியதாவது:
குறு, சிறு மற்றும் நிறுவனங்கள், உற்பத்தி மற்றும் சேவைக்கான கட்டணம் பெற, 120 நாட்களுக்கு மேல் காத்திருக்க வேண்டியுள்ளது. இதன்காரணமாக, உற்பத்தியை மேம்படுத்த முடியாமல், தொடர்ந்து கடனுக்கு ஆளாகிவந்தனர். நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு, 45 நாட்களுக்குள் கட்டணம் செலுத்தப்பட வேண்டுமென அறிவித்துள்ளது.
இத்தகைய அறிவிப்பு, குறு, சிறு தொழில்களின் வளர்ச்சிக்கான முன்னோட்டமாக இருக்கிறது. ஒவ்வொரு 'பில்' மீதும் இந்த சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். வர்த்தகர்களுக்கு, துவக்கத்தில் சிரமமாக இருந்தாலும், வரவு - செலவு நாணயம் மிகுந்ததாக மாறும். துவக்கத்தில் சில சிரமம் இருந்தாலும், வியாபாரம் சீராகும். இனி, கட்டணம் கிடைக்கவில்லை என்று கவலைப்பட தேவையில்லை; உற்பத்தியில் கவனம் செலுத்தலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
தனி அமைச்சரவை அவசியம்!
'மாநில அரசுகளில் இருப்பது போல், குறு, சிறு தொழில்களுக்கென, மத்தியிலும் தனி அமைச்சரவை உருவாக வேண்டும். புதிதாக அமையும் அரசில், குறுந்தொழில் வளர்ச்சிக்கான அமைச்சகம் இருக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளோம். நாட்டில் உள்ள, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களில், குறுந்தொழில் மட்டும் 90 சதவீதம் உள்ளது; எனவே, புதிதாக அமையும் மத்திய அரசு, இக்கோரிக்கையை பரிசீலித்து செயல்படுத்த வேண்டும்,' என்பதும், லகு உத்யோக் பாரதி அமைப்பின் கோரிக்கையாக உள்ளது.

