/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆமை வேகத்தில் 4வது குடிநீர் திட்டப்பணி!: மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் குமுறல்
/
ஆமை வேகத்தில் 4வது குடிநீர் திட்டப்பணி!: மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் குமுறல்
ஆமை வேகத்தில் 4வது குடிநீர் திட்டப்பணி!: மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் குமுறல்
ஆமை வேகத்தில் 4வது குடிநீர் திட்டப்பணி!: மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் குமுறல்
ADDED : ஜன 29, 2026 05:13 AM

திருப்பூர்: 'திருப்பூர் மாநகராட்சியில் நான்காவது குடிநீர் திட்டப்பணி மந்தமாக நடப்பதால், நீர் வினியோகம் சீராக இல்லை' என, மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் குறை கூறினர்.
திருப்பூர் மாநகராட்சி கூட்டம், மேயர் தினேஷ் குமார் தலைமையில் நேற்று நடந்தது. கமிஷனர் அமித், துணை மேயர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம்:
அன்பகம் திருப்பதி (எதிர்க்கட்சி தலைவர்):
திடக்கழிவு மேலாண்மைக்கென தனியாக கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், அபராத கட்டணமும் வசூலிப்பது, 'இரட்டை வரி' போன்றது. குப்பை மேலாண்மைக்குரிய கட்டமைப்பை நுாறு சதவீதம் முழுமைப்படுத்திய பின், அபராதம் விதிப்பதை கடுமையாக்க வேண்டும். வார்டுகளில் இறைச்சிக்கழிவுகளை சேகரிக்கும் தனியார் நிறுவனத்தினர் யார் என்பதே கவுன்சிலர்களுக்கு தெரிவதில்லை. நான்காவது குடிநீர் திட்டப்பணி துவங்கி, 4 ஆண்டாகியும் நிறைவு பெறவில்லை; ஒவ்வொரு வார்டிலும் நீர் வினியோகிக்கும் அளவு மாறுபடுகிறது.
மேயர்:
குப்பை கொட்டுவதில் விதிமீறும் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்படுகிறது. அவர்கள் ஒத்துழைப்பு வழங்கினால், அபராதம் விதிக்க வேண்டிய அவசியம் இருக்காது. அவிநாசி - மேட்டுப்பாளையம் சாலை விரிவாக்கப்பணியால் நான்காவது குடிநீர் திட்டப்பணியில் தாமதம் ஏற்படுகிறது.
கோவிந்தசாமி (தி.மு.க.):
மூன்றாவது மண்டலத்தில் பாதாள சாக்கடை திட்டப்பணி சரிவர மேற்கொள்ளப்படாததால், குடிநீர் வினியோக குழாய் உடைபடுகிறது. இதனால், சாலை விரிவாக்கம், பழுது நீக்கம் உள்ளிட்ட பல பணிகள் பாதிக்கிறது. தேர்தலுக்குள் பாதாள சாக்கடை கட்டுமானப் பணியை முடிக்கா விட்டால், ஓட்டு கேட்டு மக்களை சந்திக்க முடியாது. தெருவிளக்கு பொருத்தும் பணியிலும் தொய்வு தென்படுகிறது. 'ஒயர்' இல்லை என்பது போன்ற காரணங்களை கூறுகின்றனர்.
ராஜேந்திரன் (இ.கம்யூ.):
கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு கொசு ஒழிப்பு பணி மட்டுமின்றி, அலுவலக பணி, வாக்காளர் பட்டியல் பணி என பல பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஆனால், சம்பளம் குறைவாக வழங்கப்படுகிறது. மாவட்ட கலெக்டர் நிர்ணயம் செய்யும் குறைந்த பட்ச சம்பளம், அவர்களுக்கு வழங்க வேண்டும்.
செல்வராஜ் (இ.கம்யூ.):
மாநகராட்சி வரி விதிப்பு பணியில் பல குளறுபடிகள் நிலவுகிறது. கவுன்சிலர்கள் சொன்னால் அதிகாரிகள் கேட்பதில்லை; மாறாக, இடைத்தரகர்கள் சொன்னால் தான் கேட்கின்றனர்.
மேயர்:
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
கவுன்சிலர்கள் மணிமேகலை (மா.கம்யூ.), குணசேகரன் (பா.ஜ.), ரவிச்சந்திரன் (இ.கம்யூ.) சாந்தாமணி (ம.தி.மு.க.) ''குப்பை சேகரிக்கும் பணியில் துாய்மைப் பணியாளர்களின் எண்ணிக்கை மற்றும் வாகனங்களின் எண்ணிகையை அதிகப்படுத்தினால் தான், திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணி வெற்றி பெறும்'' என்றனர்.
அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கண்ணப்பன், ஆனந்தி ஆகியோர் பேசுகையில், ''பூ மார்க்கெட் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்,'' என வலியுறுத்தினர்.
மேயர்:
சுகாதாரக்குழு அமைக்கப்பட்டு, வாரந்தோறும் சுகாதாரப்பணி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். இம்மாதம், 29 சதவீதம் துாய்மைப் பணியாளர்கள் பற்றாக்குறை இருந்தது. இதனை சரி செய்து, 100 சதவீதம் ஊழியர்களை பணியில் ஈடுபடுத்த கான்ட்ராக்ட் நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்படும்.
நான்காவது குடிநீர் திட்டப்பணியின் நிலவரம் குறித்து, வார்டு வாரியாக கள ஆய்வு செய்து, அறிக்கையை, 5ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்; அன்றயை தினம் இதுதொடர்பான சிறப்பு கூட்டம் நடத்தப்படும். பூ மார்கெட் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

