/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வணிகம் எளிதாகும்; வேலைவாய்ப்பு பெருகும் இ.பி.எப்.,-ன் 5 திட்டங்கள்
/
வணிகம் எளிதாகும்; வேலைவாய்ப்பு பெருகும் இ.பி.எப்.,-ன் 5 திட்டங்கள்
வணிகம் எளிதாகும்; வேலைவாய்ப்பு பெருகும் இ.பி.எப்.,-ன் 5 திட்டங்கள்
வணிகம் எளிதாகும்; வேலைவாய்ப்பு பெருகும் இ.பி.எப்.,-ன் 5 திட்டங்கள்
ADDED : அக் 23, 2025 12:47 AM

திருப்பூர்: ''வணிகத்தை எளிதாக்கி வேலைவாய்ப்பை மேம்படுத்த, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன திட்டங்களை பயன்படுத்தலாம்'' என்று தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திருப்பூர் கமிஷனர் அபிேஷக் ரஞ்சன் கூறினார்.
அவர் கூறியதாவது:
வேலைவாய்ப்பு மற்றும் வணிகம் செய்வதை எளிதாக்கும் வகையில், வருங்கால வைப்பு நிதி நிறுவனம், ஐந்து திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மத்திய அரசு, வேலைவாய்ப்பை ஊக்குவிப்பதுடன், செயல்முறைகளை எளிதாக்கவும் புதிய திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதாவது, வருங்கால வைப்பு நிதி கணக்கு துவக்கிய நிறுவனங்கள் வணிகம் செய்வதை எளிதாக்குவதுடன், தொழிலாளர்களும் ஊக்குவிக்கப்படுவர்.
'விக்சித் பாரத் ரோஸ்கார் யோஜனா' இத்திட்டம் வேலை உருவாக்கத்திற்காக, தொழில் நடத்துவோரை ஊக்குவிக்கிறது, ஊழியர்களுக்கு ஒரு முறை சலுகையாக 15 ஆயிரம் ரூபாய் வரையிலும், முதன்முறை பணியில் சேர்ந்து பி.எப்., கணக்கு துவக்கும் தொழிலாளருக்கு, மாதம், 3,000 ரூபாய் வரையிலும் சலுகை வழங்கப்படுகிறது. திருத்திய 'பி.எப்.,' திட்டத்தில், வருங்கால வைப்பு நிதியில், 13 வகையான பகுதி திரும்ப பெறுதல்களை எளிய முறையில் அணுகலாம். உறுப்பினர்கள், எளிய முறையில் விண்ணப்பித்து, தங்கள் பணத்தை பெற்று பயன்பெறலாம்.
சேர்க்கை பிரசாரம் - 2025 பணியாளர் சேர்க்கை பிரசாரத்தால், புதிய தொழிலாளர்களுக்கான, வருங்கால வைப்பு நிதி கணக்கு துவக்குவது எளிதாகிறது; முன் நிலுவையை கணக்கு பார்க்காமல், திட்டத்தில் இணையலாம். 'விஸ்வாஸ்' திட்டத்தால், வழக்குகள் அல்லது சாத்தியமான வழக்குகளில் உள்ள நிறுவனங்கள், குறைந்த விகிதத்தில் இழப்பீடுகளை செலுத்த அனுமதிக்கிறது. இதன்மூலம், விரைவாக சமரச தீர்வு உருவாக்கப்படுகிறது.
புதுப்பிக்கப்பட்ட இணையதளம் புதிய இணையதளம் வருமான வரி அறிக்கைகளை எளிதாகவும், வசதியாகவும் சமர்ப்பிக்க உதவுகிறது. தேவையற்ற பிழைகளைக் குறைக்கிறது. தாக்கல் செய்யும்போது சரிபார்ப்பை உறுதி செய்கிறது. இத்தகைய சலுகைகள், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும், வணிகர்களுக்கான சுமையை குறைக்கவும் உதவுகிறது.
இது குறித்த மேலும் விவரங்களுக்கு, திருப்பூரில் உள்ள வருங்கால வைப்பு நிதி கமிஷனர் அலுவலகத்தை, ro.tiruppur@epfindia.gov.in என்ற இ-மெயில் முகவரி அல்லது, கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தை அணுகலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.