/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிராம சபாக்களில் 5,251 தீர்மானங்கள்
/
கிராம சபாக்களில் 5,251 தீர்மானங்கள்
ADDED : ஜன 27, 2025 12:30 AM

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில், ஒன்றிய நிர்வாகம் மூலம், ஊராட்சிகளுக்கு நியமனம் செய்யப்படும் பற்றாளர் தலைமையில் நேற்று கிராம சபா கூட்டங்கள் நடந்தன.
மடத்துக்குளம் ஒன்றியம் ஜோத்தம்பட்டி ஊராட்சி, கணியூர் பேரூராட்சியுடன் இணைக்கப்பட உள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் கிராமசபா கூட்டத்தை நேற்று புறக்கணித்தனர்.
மாவட்டத்தில், ஜோத்தம்பட்டி நீங்கலாக, 264 கிராம ஊராட்சிகளிலும், கிராம சபா கூட்டம் நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் (ஊராட்சி) நாகராஜ் மற்றும் அரசு அலுவலர்கள், ஆர்.டி.ஓ., மோகனசுந்தரம் உள்ளிட்டோர், ஊத்துக்குளி ஒன்றியம், ரெட்டிபாளையம் ஊராட்சியில் நடந்த கிராம சபா கூட்டத்தில் பங்கேற்றனர். பாரம்பரிய வேட்டி, சட்டை அணிந்து கலெக்டர் பங்கேற்றார்.
ஊராட்சி பொதுநிதி பயன்பாடு, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை, மக்கள் திட்டமிடல் இயக்கத்தில், வளர்ச்சி திட்டத்துக்கான ஒப்புதல் பெறுவது போன்றவை குறித்து, விவாதிக்கப்பட்டது.
மாவட்ட அளவில், 264 ஊராட்சிகளில் நடந்த கிராம சபா கூட்டங்களில், 20, 050 ஆண்கள்; 26 ஆயிரத்து, 688 பெண்கள் என, 46 ஆயிரத்து, 738 பேர் பங்கேற்றனர். பல்வேறு கோரிக்கைகளை பரிசீலித்து, 5,251 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆவேசப்பட்ட பெண்மணி
பல்லடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி அலுவலக வளாகத்தில் நடந்த கிராம சபா கூட்டத்தில் பங்கேற்ற பெண் ஒருவர், அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்விக்கணை தொடுத்தார்.
அவர் கூறியதாவது:
சாய் குரு கார்டன் பகுதியில் வசிக்கிறோம். கரைப்புதுார் - ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிகளுக்கு இடையிலான ஓடையை, ஒரு லட்சம் ரூபாய் நிதி திரட்டி நாங்களே துார்வாரினோம். ஓடையில், இறந்து போன நாய், சலுான் முடிகள், இறைச்சிக் கழிவுகள் என, அனைத்தையும் கொண்டு வந்து கொட்டுகின்றனர். மழை வராது என்பதற்கு யாராவது உத்தரவாதம் அளிக்க முடியுமா? எனில், ஓடையில் இவ்வாறு கழிவுகளை கொட்டினால் நோய் வராமல் இருக்குமா? மழை வராது என யாராவது உறுதி கூறட்டும், இனிமேல், ஓடையை துார்வாருவது குறித்து பேசவே மாட்டேன். கழிவு நீருக்குள் குடிநீர் குழாய் செல்கிறது. இதை மாற்றித் தருமாறு பலமுறை கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள், ஆட்சியாளர்கள் என யாருமே நடவடிக்கை எடுக்கவில்லை. அடிப்படை பிரச்னைகளுக்கு அதிகாரிகள் தீர்வு கண்டிருக்க வேண்டும்.