ADDED : பிப் 17, 2024 01:50 AM
திருப்பூர்:மக்களுடன் முதல்வர் திட்டத்தில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி காங்கயத்தில் நேற்று நடந்தது; 1,327 பயனாளிகளுக்கு, மொத்தம் 6.79 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் முதல்கட்டமாக, கடந்த டிச., 18 முதல் ஜன., 6 வரை, 71 இடங்களில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடத்தப்பட்டது. இம்முகாம்களில், மொத்தம் 33,711 மனுக்கள் பெறப்பட்டன; இவற்றில், 22,392 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
'மக்களுடன் முதல்வர்' திட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கிவைத்தார்.
திருப்பூர் மாவட்டத்தில், காங்கயம் ஸ்ரீமஹாராஜா மஹாலில், கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நிகழ்ச்சி நடந்தது.
பல்வேறு துறைகள் சார்பில், 1,327 பயனாளிகளுக்கு, ரூ.6.79 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அமைச்சர் சாமிநாதன், நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், ரூ. 1 லட்சம்; பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், 2.55 லட்சம்; மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 26,020; பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 87.78 லட்சம்; மாவட்ட தொழில்மையம் சார்பில், 5.51 கோடி ரூபாய்; கூட்டுறவு துறை சார்பில், 95 ஆயிரம் ரூபாய் என, மொத்தம் 6.79 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
சப்கலெக்டர் சவுமியா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் (மலர்விழி), தாராபுரம் ஆர்.டி.ஓ., அரசன் உட்பட அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.