/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு கல்லுாரி கலந்தாய்வில் 702 இடங்கள் நிறைவு
/
அரசு கல்லுாரி கலந்தாய்வில் 702 இடங்கள் நிறைவு
ADDED : ஜூன் 10, 2025 09:32 PM

- நிருபர் குழு -
உடுமலை அரசு கலைக்கல்லுாரியில் நடந்த இளநிலை பட்டப்படிப்புகளுக்கான பொதுப்பிரிவு முதற்கட்ட கலந்தாய்வில், 702 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், முதலாமாண்டு இளநிலை பட்டப்படிப்பு பிரிவில் மொத்தமாக, 864 இடங்கள் உள்ளன. நடப்பு கல்வியாண்டுக்கான சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு கடந்த, 2ம் தேதி துவங்கி இரண்டு நாட்கள் நடந்தது.
தொடர்ந்து பொதுப்பிரிவினருக்கான சேர்க்கை கலந்தாய்வு 4ம் தேதி முதல் நேற்று வரை நடந்தது. நேற்று 65 இடங்கள் நிரப்பப்பட்டன.
பொதுப்பிரிவு முதற்கட்ட கலந்தாய்வில் மொத்தமாக, 702 பேர் சேர்ந்துள்ளனர். இளநிலை முதலாமாண்டில், 162 இடங்கள் மீதமுள்ளன. முதற்கட்ட கலந்தாய்வில் விடுபட்ட இடங்களுக்கு வரும், 13ம் தேதி நடக்கிறது.
இளநிலை முதலாமாண்டு மாணவர்களுக்கு வரும், 30ம் தேதி நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகள் துவங்குகின்றன. இத்தகவலை, கல்லுாரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வால்பாறை
வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், மொத்தம் உள்ள, 9 பாடப்பிரிவுகளின் கீழ், 520 சீட்களுக்கு இளங்கலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கைகான 'ஆன்லைன்' வாயிலாக, மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இதனையடுத்து, வால்பாறை கல்லுாரியில் தற்போது பொதுக்கலந்தாய்வு நடக்கிறது.
கல்லுாரி முதல்வர் ஜோதிமணி கூறியதாவது:
வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடப்பாண்டு மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு, ஆன்லைன் வாயிலாக பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் பொதுக்கலந்தாய்வு நடக்கிறது.
நேற்று வரை, 120 மாணவர்கள் கல்லுாரியில் சேர்ந்துள்ளனர். வரும் 14ம் தேதி வரை கலந்தாய்வு நடப்பதால், மாணவர்கள் அரசு கல்லுாரியில் சேர மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இவ்வாறு, கூறினார்.