ADDED : ஆக 24, 2026 04:41 PM
திருப்பூர், ஆக. 25–
துறை சார்ந்த அரசு அலுவலர்களின் துரித நடவடிக்கையை எதிர்பார்த்து, கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமையில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்தில், பொதுமக்கள் மொத்தம் 862 மனுக்களை அளித்தனர். மனுக்கள், உரிய நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கப்பட்டன.
புதியன தந்த
அவப்பெயர்
நல்லுார் நுகர்வோர் நலமன்ற தலைவர் சண்முகசுந்தரம்: புதிதாக உருவாகியுள்ள சில நுகர்வோர் சங்கங்கள், தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிக்கும் முறைகேடுகளில் ஈடுபடுவதால், உண்மையான நுகர்வோர் அமைப்புகளுக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது; ராயபுரத்தில் நடந்த ஒரு பிரச்னை தொடர்பாக, அரசியல் கட்சி பிரமுகரிடம் இருந்து 1.75 லட்சம் ரூபாய் மிரட்டி பறிக்கப்பட்டது குறித்து விசாரித்து, சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுக்கடையை
மூடுங்கள்
கணியூர் பகுதி பெண்கள்: மடத்துக்குளம் தாலுகா, ஜோத்தம்பட்டி கிராமம், அண்ணா குடியிருப்பு பகுதியில், பிரதான சாலை மற்றும் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி அருகே செயல்படும் டாஸ்மாக் கடையால் பெண்கள் பாதிக்கப்படுவதால், கடையை உடனடியாக அகற்ற வேண்டும்.
மாணவர்களுக்கு
இடநெருக்கடி
பொல்லிக்காளிபாளையம் அரசு பள்ளி முன்னாள் மாணவர் மற்றும் பள்ளி வளர்ச்சி அறக்கட்டளை: ஒரே வளாகத்தில் செயல்படும் துவக்க, மேல்நிலைப் பள்ளிகளில், 1,300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் நிலையில், இடநெருக்கடியால் ஒரு வகுப்பறையில் 70 பேர் அமர வேண்டியுள்ளதால், சிந்து நகரில் உள்ள பூமிதான நிலத்தை பள்ளிக் கல்வித்துறைக்கு மாற்றி வழங்க வேண்டும்; இதுகுறித்து, 2022ல் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மாற்றுத்திறனாளிகள்
கண்ணீர்
மாற்றுத்திறனாளிகள் மனு: மகாதேவன் தலைமையில் வந்த 15 மாற்றுத்திறனாளிகள், மனு அளிக்க வந்திருந்தனர். தகவல் அறிந்த கலெக்டர், கூட்ட அரங்கிலிருந்து வெளியே வந்து, போர்டிகோ பகுதியில் அவர்களிடம் மனுக்களை பெற்றார். அவர்களது மனு: அரசு, தனியார் பஸ்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான இருக்கை ஒதுக்கப்படுவதில்லை; தகுதியுள்ளோருக்கு தாயுமானவர் திட்டத்தில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதில்லை; பஸ்ஸ்டாண்ட் மற்றும் பொது இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பிடங்கள் பூட்டப்பட்டு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவிலான குறைகேட்பு கூட்டம் நடத்த வேண்டும்; வெள்ளிக்கிழமை நடைபெறும் மருத்துவ முகாமில் கண் மருத்துவர் உள்ளிட்ட தேவையான மருத்துவர்கள் பங்கேற்க வேண்டும்; போர்டிகோ பகுதியில் வாகனங்களை நிறுத்தாமல் மாற்றுத்திறனாளிகள் செல்ல வசதி ஏற்படுத்த வேண்டும்; மாதாந்திர உதவித்தொகையை, மாதம் 1 முதல் 5ம் தேதிக்குள் வழங்கி, அரசு அலுவலகங்களில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், பிரச்னைகளுக்கு உரிய தீர்வு காணப்படும் என உறுதியளித்தார்.
