/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஓலையக்கா கொண்டையில ஒரு கூடைத் தாழம்பூ; களைகட்டிய காணும் பொங்கல் கொண்டாட்டம்
/
ஓலையக்கா கொண்டையில ஒரு கூடைத் தாழம்பூ; களைகட்டிய காணும் பொங்கல் கொண்டாட்டம்
ஓலையக்கா கொண்டையில ஒரு கூடைத் தாழம்பூ; களைகட்டிய காணும் பொங்கல் கொண்டாட்டம்
ஓலையக்கா கொண்டையில ஒரு கூடைத் தாழம்பூ; களைகட்டிய காணும் பொங்கல் கொண்டாட்டம்
ADDED : ஜன 16, 2025 11:24 PM

''ஓலையக்கா கொண்டையில ஒரு கூடைத் தாழம்பூ
தாழம்பூ சித்தாடை... தலைமேலயே முக்காடு
பொட்டுன்னு சத்தம் கேட்டு புறப்பட்டாளாம் ஓலையக்கா...''
காணும் பொங்கல் தினமான நேற்று திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் இந்தக் கும்மி பாட்டுச் சத்தத்தை, கேட்க முடிந்தது.
''நாழி, நாழி நெல்லுக் குத்தி,
நடுக்கெணத்துல பொங்க வச்சு
கோழியக்குழம்பாக்கி குத்து நெல்லும் சோறாக்கி,
கோழிக்கறி பத்தலையேன்னு கொதிக்கிறாளாம் ஓலையக்கா...''
கும்மிப் பாட்டு தொடர்ந்தது. கன்னிப்பொங்கல், பிள்ளையார் பொங்கல், பூப்பொங்கல் என்று காணும் பொங்கலுக்கு வெவ்வேறு பெயர்கள்.
''முன்பெல்லாம், காணும் பொங்கல்னாலே, இளவட்டங்களுக்கு ஒரே குஷியாயிடும். பெரியவங்களும் வயசை மறந்துருவாங்க... அவ்ளோ நல்லா இருக்கும், காணும் பொங்கல் கொண்டாட்டம்'' என்று லயிக்கிறார்கள், கிராமத்துப் பெரியவர்கள்.
''வட்ட, வட்டப் புள்ளாரே
வடிவெடுத்த புள்ளாரே
முழங்காலு தண்ணியில மொதக்கறியே புள்ளாரே''
கும்மியாட்டம் தொடர்கிறது.
காணும் பொங்கல் தினமான நேற்று, பெண்கள் வீட்டில் கோலமிட்டு கரும்பு, மஞ்சள் போன்றவற்றை படைத்து பொங்கல் வைத்து இறைவனை வழிபட்டனர். காணும் பொங்கலை முன்னிட்டு உறவினர்களை அழைத்து விருந்து வைத்தனர்.
சிறுவர், சிறுமியர், பெண்கள் என பலரும் உற்சாகமாக கிராமங்களில் ஒன்று கூடி கும்மியடித்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பறிமாறிக் கொண்டனர். கரும்பு, முறுக்கு, பொரி கடலை, பச்சை மாவு, கச்சாயம், அதிரசம் என தங்களுக்கு பிடித்த தின்பண்டங்களை எடுத்துக் கொண்டு பூப் பறிக்க சென்றனர். அங்கு ஆடிப்பாடி மகிழ்ந்தனர். தாங்கள் கொண்டு சென்ற தின்பண்டங்களை சாப்பிட்டு விட்டு பின் வீடு திரும்பினர். பல இடங்களில் சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசு வழங்கினர். காணும் பொங்கலை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடந்தது.
பொதுமக்கள் கூறுகையில், ''காணும் பொங்கல் அன்று சொந்த ஊருக்கு வந்து உறவுகளை சந்தித்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வது வழக்கம். பூப்பறிக்க செல்லும் உறவினர்கள், நண்பர்கள் சந்தித்து கொள்ளும்போது தங்கள் பிள்ளைகளின் திருமணத்தை பேசி முடிக்கும் வைபவங்கள் நடக்கவும் இந்தப் பொங்கல் திருநாள் வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது'' என்றனர்.
- நமது நிருபர் -