/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொன்முத்து நகர் குடியிருப்பில் பூத்துக்குலுங்கும் பூங்கா
/
பொன்முத்து நகர் குடியிருப்பில் பூத்துக்குலுங்கும் பூங்கா
பொன்முத்து நகர் குடியிருப்பில் பூத்துக்குலுங்கும் பூங்கா
பொன்முத்து நகர் குடியிருப்பில் பூத்துக்குலுங்கும் பூங்கா
ADDED : ஜூலை 14, 2025 12:55 AM

திருப்பூர் மாநகராட்சி, 48வது வார்டுக்கு உட்பட்ட நல்லுார், முத்தணம்பாளையம் செல்லும் ரோட்டில் அமைந்துள்ளது பொன்முத்து நகர் குடியிருப்பு பகுதி.
கடந்த 1990ம் ஆண்டில் நல்லுார் பேரூராட்சியாக இருந்த போது இந்த மனைப்பிரிவு ஏற்படுத்தப்பட்டது. ஏறத்தாழ 12 ஏக்கர் பரப்பில், பிரதான வீதிகளுடன் சேர்த்து மொத்தம் 12 வீதிகளுடன் இக்குடியிருப்பு அமைந்துள்ளது.
மனைப்பிரிவு 1990ம் ஆண்டில் துவங்கப்பட்டாலும், வீடுகள் கட்டி குடியேறுவது சற்று தாமதமாகவே இருந்தது. மெல்ல மெல்ல அனைத்து வீதிகளிலும் வீடுகள் கட்டி அதன் உரிமையாளர்கள் குடியேறினர்.
மனைப்பிரிவுக்கான ரிசர்வ் சைட் ஏறத்தாழ ஒரு ஏக்கர் பரப்பில் அமைந்திருந்தது. கேட்பாரற்ற நிலையில், இந்த இடம் இருந்த நிலையில், குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைப்பதற்கான பணிகள் துவங்கிய போது, குடியிருப்போர் இது குறித்து தங்களுக்குள் விவாதிக்க துவங்கினர்.
அதனடிப்படையில், இவர்களுக்குள் ஒரு ஒற்றுமையை ஏற்படுத்திக் கொள்ளும் விதமாக குடியிருப்போர் நலச்சங்கத்தை துவங்கினர்.
மீட்கப்பட்ட பூங்கா
பொன்முத்து நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் சண்முகம், செயலாளர் சிவகுமார், பொருளாளர் அலிமா, செயற்குழு உறுப்பினர்கள் பார்த்திபன், பாலசுப்ரமணியம் ஆகியோர் கூறியதாவது:
கடந்த 2019ம் ஆண்டில் எங்கள் பகுதி மக்கள் நலன் கருதி இந்த நலச் சங்கத்தை துவங்கி செயல்படுத்தி வருகிறோம். எங்கள் சங்கத்தின் முதல் கட்ட நடவடிக்கை என்பதே இங்குள்ள ரிசர்வ் சைட்டை முழுமையாக மீட்டு, பூங்கா பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பது தான். சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஒத்துழைப்புடன் அதை நல்ல முறையில் மீட்டோம். தொடர்ந்து அதை பாதுகாப்பாக பராமரிக்கும் வகையில், சில நடவடிக்கை மேற்கொண்டோம்.
அவ்வகையில் இங்கு மட்டும் நுாறு மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் 25 விதமான மரங்கள் உள்ளன. அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்த மரங்கள். சொட்டுநீர்ப் பாசனத்தில், அனைத்து மரங்களும் தற்போது நல்ல முறையில் வளர்ந்து பயன் தருகின்றன.
சிறுவர்களுக்காக...
மரங்கள் மட்டும் போதாது என்பதால், பூங்கா முழுவதும் சிறுவர் விளையாட்டு உபகரணங்கள்; உடற்பயிற்சி உபகரணங்களும் பொருத்தப்பட்டது. இதற்கு குடியிருப்போர் அனைவரும் தங்கள் பங்களிப்பை வழங்கினர். மேலும், பூங்கா முன்புறம் சுற்றுச்சுவர் அமைத்தும், மீதமுள்ள மூன்று பகுதிகளிலும் கம்பி வேலியும் அமைத்து பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.
பூங்காவின் மையப்பகுதியில் இன்னும் இடம் உள்ளது. தினமும் பலரும் நடைப் பயிற்சி மற்றும் ஓய்வு மற்றும் மாறுதலுக்காக பூங்காவைப் பயன்படுத்தி வருகின்றனர். இதில், நடைப் பயிற்சி மேடையும், செயற்கை நீரூற்று போன்ற அமைப்புகள் ஏற்படுத்த வேண்டும். சிறுவர் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள் போன்றவற்றை மேம்படுத்த வேண்டும்.
பூங்கா வளாகத்தில் வழக்கமாக சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய தினங்களில் தேசியக் கொடியேற்றி கொண்டாடப்படும். இதில் அனைத்து வீடுகளிலிருந்தும் குடும்பத்தினர் பங்கேற்பது வழக்கம். பூங்காவுக்கென தனி ஆழ்குழாய் கிணறு மற்றும் மோட்டார் அமைத்தால் இன்னும் வசதியாக இருக்கும் என கருதுகிறோம்.
எங்கள் குடியிருப்பில் பெரும்பாலான வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும், பரவலாக அமைந்துள்ள குடியிருப்பு என்பதால் வெளி பகுதியினர் நடமாட்டத்துக்கு எந்த முகாந்திரமும் இல்லை.
அனைத்து வீடுகளின் முன்பகுதிகளில் முடிந்தளவு மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கின்றனர். இத னால், இயற்கையான ஒரு சூழல் நிலவுகிறது. தெரு விளக்குகளைப் பொறுத்தவரை அனைத்து பகுதியிலும் தேவையான அளவில் பொருத்தியுள்ளனர்.
புதியதாக பொருத்திய விளக்குகள் சற்று வெளிச்சம் குறைவானதாக உள்ளது. அதிக திறன் கொண்ட விளக்குகள் பொருத்தினால் இன்னும் மேம்படும்.
குடிநீர் பிரச்னை இல்லை
குடிநீரைப் பொறுத்தவரை 10 நாட்களுக்கு ஒரு முறை வருகிறது. இருப்பினும் தேவைக்கேற்ப கிடைக்கிறது. குடிநீர் பிரச்னை எழுவதில்லை. குப்பையை தினமும் வந்து துாய்மைப் பணியாளர்கள் வாங்கிச் செல்கின்றனர். ஆனால், அவர்கள் வரும் நேரம் பெரும்பாலான வீடுகளில் யாரும் இருப்பதில்லை.
இதனால், பலரும் ஒரு பகுதியில் வைத்துள்ள குப்பைத் தொட்டியில் தான் குப்பையைக் கொட்ட வேண்டியுள்ளது. அந்த தொட்டியும் மிகவும் சிறியதாக இருப்பதால் பெரும்பாலும் குப்பை தொட்டி நிரம்பி சுற்றிலும் கழிவுகள் பரவிக்கிடப்பது சகஜமாக நடக்கிறது.
பாதாள சாக்கடை திட் டப் பணிக்காக குழி தோண்டிய பல இடங்களில் குடிநீர் குழாய்கள் சேதப்படுத்தப்பட்டு விட்டது. இதனால் குடிநீர் சப்ளையாகும் போது பல வீதிகளிலும் குடிநீர் வெளியேறி வீணாகிறது. இதனால் ரோடு சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. குழாய் உடைப்பு முறையாக சரி செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
வீடுகளிலிருந்து கழிவு நீர் கொண்டு செல்லும் கால்வாய்கள் சில இடங்களில் அடைப்பு ஏற்பட்டு சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. சில இடங்களில் கால்வாய் கட்டுமானம் சேதமடைந்துள்ளது. இதனால் அங்கு கழிவு நீர் தேங்கி அவஸ்தை ஏற்பட்டுள்ளது.
குடியிருப்பு பகுதியில் பெரும்பாலான வீடுகள் கட்டி குடியேறியும் கழிவு நீர் கால்வாய் அமைப்பதில் பெரும் சிரமம் நிலவியது. கடந்த 2022ம் ஆண்டில் தான் இங்கு கால்வாய் அமைப்பே கொண்டு வரப்பட்டது. அதிலும் ஐம்பது சதவீதம் தான் கட்டினர். பெரும்பாலான வீதிகளில் கால்வாய் அமைப்பு ஏற்படுத்தவில்லை.
எங்கள் பகுதிக்கு தற்போது தான் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்காக ரோடுகளில் குழி தோண்டி குழாய்கள் பதித்துள்ளனர். வீடுகளில் இன்னும் இணைப்பு வழங்கப்படவில்லை. இப்பணிக்காக தோண்டிய ரோடு பல இடங்களில் குண்டும் குழியுமாக முறையாக மூடப்படாமல் உள்ளது.
இவற்றை முறையாக மூடி தார் ரோடும் அமைக்க வேண்டும்.பாதாள சாக்கடை பணி மந்த கதியில் உள்ளது. அதை விரைவுபடுத்த வேண்டும். அனைத்து ரோடுகளிலும் தார் ரோடு புனரமைக்க வேண்டும். இப்பணி நான்கு மாதங்களுக்கு மேலாக நடக்கிறது. இதனால், பல வகையிலும் சிரமம் நிலவுவதாக, குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் கூறுகின்றனர்.