/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பயிற்சி, முயற்சி அவசியம்... ஒரு வில்! வில் வித்தையில் சாதிக்கலாம்
/
பயிற்சி, முயற்சி அவசியம்... ஒரு வில்! வில் வித்தையில் சாதிக்கலாம்
பயிற்சி, முயற்சி அவசியம்... ஒரு வில்! வில் வித்தையில் சாதிக்கலாம்
பயிற்சி, முயற்சி அவசியம்... ஒரு வில்! வில் வித்தையில் சாதிக்கலாம்
ADDED : ஜன 22, 2024 12:46 AM

வில் வித்தை அவ்வளவு எளிதில் யாருக்கும் கைகூடாது. முறையான பயிற்சி, இடைவிடாத ஆர்வம், விடாமுயற்சி இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும். வெளிநாடுகளில் பிரபலமாக இருக்கும் இந்த போட்டியில், நம் நாட்டு மாணவர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அவ்வகையில், திருப்பூரை சேர்ந்த ஆபியா என்ற மாணவி, வில்வித்தையில் சாதனை புரியும் நோக்கோடு, வில்லில் இருந்து பாயும் அம்பு போல, பயணிக்கிறார்.
திருப்பூர், மங்கலம் ரோடு, சின்னாண்டிபாளையத்தில் உள்ள பிளாட்டோஸ் பள்ளி பிளஸ் 2 மாணவி, ஆபியா. இவர் கடந்த டிச., மாதம் குஜாரத்தில் நடந்த தேசிய வில்வித்தை போட்டியில், தமிழகம் சார்பில் பங்கேற்றார். இதற்கு முன் ஜெய்ப்பூரில் நடந்த தேசிய 'பைக்கா' போட்டியில், 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் முதலிடம் பெற்றார்.
வில்வித்தை போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்க ஆர்வம் காட்டி வரும் இவருக்கு, உடற்கல்வி ஆசிரியர்கள் சதிஷ்குமார் சர்மா, தனசேகர் ஆகியோர் பயிற்சி அளிக்கின்றனர். ஆபியா போல், தேசிய போட்டியில் பங்கேற்க பள்ளியில் இருந்து, ஒன்பது வீரர்கள் தயார்படுத்தப்பட்டு வருகின்றனர்.
ஆபியாவின் தந்தை பேரோஸ்கான் பனியன் நிறுவனத்தில் மெர்ச்சன்டைசராக பணியாற்றுகிறார். தாய் யாஷ்மின் இல்லத்தரசி. தம்பி அப்சல்கான். மாநில போட்டித்தேர்வு, தேசிய போட்டிக்கான செலக் ஷன் என்றால் முதலில் ஆஜராகி விடுகிறார், ஆபியா.
ஆர்வம் எப்படி?
வில் வித்தையில் உள்ள ஆர்வம் ஆபியா கூறியதாவது:
துவக்கத்தில் குறிபார்த்த சுடும் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தான் ஆர்வம் அதிகமாக இருந்தது. ஆனால், வில்வித்தை போட்டிகளை காணும் போது, அதில் அணியும் ஆடை, வில்வித்தை வீரர்களின் ஒவ்வொரு 'ஸ்டெப்ஸ்' மிகவும் பிடித்திருந்தது.
அதனால், பாதையை மாற்றி வில்வித்தை போட்டிக்கு வந்தேன். வில்வித்தை போட்டியில் பங்கேற்க ஆர்வம் இருப்பவர்கள் நேரடியாக மாநில போட்டிக்கான தகுதித்தேர்வில் பங்கேற்க முடியும். அதில், சாதித்து விட்டால், தேசிய போட்டிக்கு சென்று விடலாம். வெற்றி பெறும் வரை மேலே பயணித்துக் கொண்டே இருக்கலாம்.
வில்வித்தை நுணுக்கமான விளையாட்டு தான். ஆனால், தெளிவாக கற்றுக்கொண்டால் எளிதில் வெற்றி கண்டு விடலாம். பொறுமையுடன் காத்திருந்த, நேர்கோட்டில் இலக்கை தீர்மானித்து, சடாரென தாக்குவது இலக்கு. அதுவே வெற்றி,' என்றார்.